Monday, 16 December 2013

மார்கழிப்பூவே.....

 
 

அதிகாலை நான்கு மணிகெல்லாம் எங்கோ தூரத்தில் கேட்கும் அந்தப்பாடல்.
 
கற்பூர நாயகியே கனகவள்ளி....காளி மகமாயி கருமாரியம்மா...
 
மார்கழி முதல் நாள் முதல், பொங்கல் வரை தொடரும் இந்த மாரியம்மன் பாடல்கள,. ஆற்றுக்கு அந்தப்புரம் அழிசிகுடி என்ற ஊரில் ஏதோ ஒரு
கோவிலில் போடுவார்கள். மெல்லியதாக அதே நேரத்தில் தெளிவாக கேட்கும். மார்கழியையும், எல் ஆர் ஈஸ்வரியையும் பிரிக்கவே முடியாது.
 
வீட்டுப்பெண்களை கோலம் போட எழுப்புவதற்காக  சங்கு ஊதி வருவார். மூன்றரை அல்லது நான்கு மணியளவில் மணி அடித்து, சங்கு ஊதி பாட்டு
பாடிக்கொண்டு வருவார். நிறைய தெருக்களை சுற்றவேண்டுமென்பதால் சில நேரங்களில் இரவு இரண்டு மணிக்கு கூட வருவதுண்டு. வீட்டுக்கூடத்தில் நள்ளிரவில்  குளிரில் நடுங்கிக்கொண்டு போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு பயம் கலந்த சுவாரசியத்துடன்
கேட்டுக்கொண்டிருப்போம்.
 
சற்று நேரத்தில் நான்கு நான்கரை மணியளவில்அம்மா எழுந்துவிடுவார்கள். தெரு பெருக்கி சாணி தெளித்து கோலம் போட செல்வார்கள். நாங்கள்
அம்மாவிற்கு துணை.அம்மாவின் கலையார்வம் விரலிடுக்கின் வழியாக கோலமாக உருப்பெரும். பூக்கோலம், சிக்குக்கோலம் என பல வகை
உண்டு. எல்லார் வீடுகளிலும் தெருவடைத்து கோலம் போடுவார்கள். அங்கே அறிவிக்கப்படாத ஒரு போட்டி இருக்கும். யார் வீட்டில் அழகான, பெரிய
கோலம் என்று. சந்தேகத்திற்கிடமில்லாமல் அம்மா தான் வின்னர். மாமியார் நன்றாக கோலம் போட்டால் மருமகளுக்கு போட வராது என்ற விதியை
வெற்றிகரமாக தகர்த்தெரிந்தவர் அம்மா. எங்கள் ஆயா மிக நன்றாக போடுவார்களாம். அடுத்த தலைமுறையிலும் அதுவே தொடர்ந்தது.
 
கோலமாவில் வண்ணங்களை கலந்து கொடுப்பது எனது வேலை. காது மறைத்து தலையில் துண்டை சுற்றிக்கொண்டு குத்துக்காலிட்டு
உட்கார்ந்துகொண்டு கலர் பொடிகளை தூவிக்கொண்டிருப்போம். கோலம் முடிந்ததும் அதன் நடுவே ஒரு பூசணிப்பூ  அல்லது பரங்கிப்பூ
வைப்பார்கள். யார் வீட்டில் பூசணி, பரங்கிக்கொடிகள் இருக்கிறதோ அவர்கள் பக்கத்து வீடுகளுக்கு பூ கொடுப்பார்கள். சாணியால் பிள்ளையார்
பிடித்து அதன் மேல் பூவை வைத்தவுடன் கோலம் நிறைவு பெறும்.
பிறகு இந்தப்பூக்களை சாணி மேல்  வைத்து பொங்கல் ராட்டிகள் தட்டப்படும். தை பெரும்பொங்கலன்று பானை பொங்கியதும் இந்த ராட்டியை
அடுப்பில் வைக்கவேண்டும்.
 
ஆறு மணிக்கு எழுந்து ஐந்து புள்ளிக்குள் இரண்டு நிமிடங்களில் போடப்பட்ட  இன்றைய எங்கள் அப்பார்ட்மெண்ட் கோலம் சொல்லும் கதைகள்
ஏராளம்.
 



Wednesday, 20 November 2013

நெருப்புப்பூச்சிகள்

   


கார்த்திகை தீபத்தினுடைய புராணக்கதை என்னவாக வேண்டுமாலும் இருந்துவிட்டுப்போகட்டும். கிராமத்து சிறுவர்களுக்கு அது இன்னொரு தீபாவளி. கொண்டாட்ட நாள். தீபாவளியைப்போலவே எப்போது வரும் என
நீண்டநாட்கள் நாங்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் ஒரு பண்டிகை.
வாங்க வேண்டிய பட்டாசுகளின் பட்டியலைத்தயாரிப்பதோடு தீபாவளியின் வேலை முடிந்துவிட்டது. எவ்வளவு கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பதெல்லாம் அப்பாக்களின் கையில்.

ஆனால் கார்த்திகை தீபம் அப்படி அல்ல. நாங்களே தொடைத்தட்டி களமிறங்கும் வேலை. கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்னதாகவே எங்களின் தோள்கள் தினவெடுக்கத்தொடங்கும். கார்த்திகைப்பொட்டலம் செய்வதற்கான முன்னெற்பாடுகளில் முனைப்புடன் களத்தில் குதிப்போம்.

முதல் வேலை கரி. அடுப்புக்கரி சேகரித்து காயவைக்கவேண்டும். கிராமமாக இருப்பதால் கரிக்கு பஞ்சம் இருப்பதில்லை. எல்லாருடைய வீடுகளிலும் விறகடுப்பு உண்டு.  அப்போது கேஸ் அடுப்பெல்லாம் இல்லை. சிலரிடம் மண்ணெண்ணை ஸ்டவ் இருப்பதுண்டு. எங்கள் வீட்டிலும் ஸ்டவ் இருந்தது. பாதி சமையல் ஸ்டவ்விலும் மீதி விறகடுப்பிலும் நடக்கும்.அதனால் அடுப்புக்கரி எப்போதும் இருக்கும். அப்படியே கிடைக்கவில்லை என்றாலும் சில பல மரக்கட்டைகள் நெருப்பிற்கு பலியாவதுண்டு.கரியை நன்றாக வெயிலில் காயவேண்டும். நான்கு இருகையளவு கரியை எடுத்து சாக்கின் மேல் பரப்பி வீட்டிற்கு முன் கொரட்டில் காயவைப்போம். பள்ளி செல்லும் வேலை இருப்பதாலும், மழைக்காலமாதலாலும் வீட்டில் இருப்பவர்கள் தான்
அதற்கு காவல். பள்ளி முடிந்து வந்ததும் முதல் வேலை நன்றாக காய்ந்திருக்கிறதா என பார்ப்பதுதான்.

கார்த்திகைப்பொட்டலம் சுற்றும் போது வரும் தீப்பொறி வாலுடன் வரவேண்டுமானால் அதற்கு பனம்பூ கரி வேண்டும்.
கத்தி, கபடா, வாங்கு, கொம்பு என அனைத்து ரக போர் ஆய்தங்களுடன் தேடுதல் தொடங்கும். பெண் பனை மரங்களே காய்க்கும்.  ஆண் மரங்கள் காய்ப்பதில்லை. எங்களைப்போலவே தீவட்டி தடியன்கள்தான்.  ஆனால் பூக்கும். எங்களுக்குத்தேவை அந்தப்பூக்கள்தான். எத்தனையோ தந்திரங்கள் செய்து முற்றிக்காய்ந்த பூக்களைப்பறிப்போம். பூக்களைப்பற்றி சொல்வதால் பறிப்போம் என சொல்லுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தப்பூக்களை அப்படி
பறிக்கமுடியாது. பனைமரத்தின் உச்சியில் மெல்லிய, நீண்ட வாழைப்பழங்களைப்போல் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும். ஏணி வைத்து பாதி மரம் ஏறி, வாங்கால் வெட்டவேண்டும். சில வீரபராக்கிரமசாலிகள் கையில் கத்தியுடன் உச்சியில் ஏறி வெட்டுவதும் உண்டு. என்னுடைய வீரம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நமக்குத்தான் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் என்பதால் பத்தடி மரத்தில் ஏறும்போதே தொடைகள் தாளம் போட ஆரம்பித்துவிடும். உச்சிவரைலாம் ஏறுவதில்லை வாங்கால் வெட்டுவதோடு சரி. இல்லையென்றால் மேலேயிருந்து வெட்டிப்போடுவதை
கீழே பொறுக்கும் குழுவின் தளபதி நான்.

இந்தப்பனம்பூ வெட்டுவதில் குழுவாகவே செயல்படுவோம். பிறகு சமமாக பங்கிட்டுக்கொள்வோம். பூவைக் காயவைத்து நெருப்பிலிட்டு கரியாக்கி அதையும் காயவைக்கவேண்டும். இந்தக் கரித்துண்டுகள் ஏற்கனவே காய்ந்துகொண்டிருக்கும் விறகு கரித்துண்டுகளுடன் சேர்க்கப்படும்.

நல்ல ஒரு சுபயோக சுப தினத்தில், மங்களகரமாக நேரத்தில் விறகுக்கரியையும், பனம்பூக்கரியையும் கையில் கிடைக்கும் எல்லா ஆயுதங்களாலும் நன்றாக உடைத்து,இடித்து, தூளாக்கி பிறகு நன்றாக பொடியாக்குவோம். ஒரே ரணகளம்தான். அப்போது நான் நல்ல சிவப்பு என்பதால் ( சிரிக்கக்கூடாது , நான் நிஜமாலுமே அப்போது சிவப்புதான் )
கரியைகழுவுவதற்கே ஒரு மாமாங்கமாகும். நாங்கள் அனைவருமே கரிபால்டிகள்தான் அப்போது.நல்ல பருத்தி துணியாக எடுத்து, சதுரமாக வெட்டி எடுத்து அதில் நடுவில் இந்தக்கரிப்பொடியைப்பரப்பி மடித்து பிறகு
பாயைச்சுருட்டுவதுபோல் சுருட்டி பிரியாமல் இருக்க நூலால் கட்டி வைப்போம். இதுதான் கார்த்திகைப்பொட்டலம். விறகுக்கரி தனியாகவும், பனம்பூக்கரி தனியாகவும் பொட்டலங்களாக்கப்படும். தீபத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த வேலைகள் முடிந்துவிடும்.

ஆமணக்கு செடியில் மூன்றாகப்பிரியும் கிளைகளாகப்பார்த்து வெட்டி, அதன் நடுவில் இந்தப்பொட்டலத்தை வைத்து மேலே மூன்று கிளையையும் ஒன்றாக்கி இறுக்கிக்கட்டி அதன் நுனியில் நீண்ட கயிற்றைக்கட்டினால் வேலை முடிந்தது.

இனிமேல் ஒன்லி எக்ஸிக்யூஷன் தான். தீபத்தன்று கட்டிவைத்த கயிற்றை செங்குத்தாகப்பிடித்து உள்ளே இருக்கும் கரிப்பொட்டலத்தில் மேல் நெருப்புத்துண்டங்களை வைத்து லேசாக ஊஞ்சல் போல் இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் உள்ளே இருக்கும் கரிப்பொடிநெருப்பில் பட்டு, பற்றி தீப்பொறிகளாக, சிதறல்களாக தெறிக்கும்.பனம்பூ பொட்டலத்திலிருந்து வரும் பொறிகளுக்கு அழகாக சின்னச்சின்னதாய் வால்கள் முளைத்திருக்கும்.
நெருப்புபொறி வந்தவுடன் சுற்றவேண்டியதுதான்.

தலைக்கு மேலே வட்டமாக சுற்றுவதுதான் அடிப்படை. கற்றுகுட்டிகள் சுற்றுவது அது.  இரு புறமும் மாற்றி மாற்றி இன்ஃபினிட்டி சிம்பல் போல் முன்பக்கமாக சுற்றுவதற்க்குப் பெயர் வண்டிச்சக்கரம். டிரைய்னியிலிருந்து ப்ரொபேஷனல் பீரியடில் இருப்பவர்கள் சுற்றுவது இது.ப்ரொஃபஷனல்கள் நாற்புறமும் சுற்றுவார்கள். முதலில் தலைக்குமேல் சுற்றி, இருபுறமும் வண்டிச்சக்கரம் சுற்றி பிறகு கையை வளைத்து முதுகிற்கு பின்னால் ஒரு வட்டம். மீண்டும் தலைக்குமேல் என தொடரும்.

எங்கேயாவது சிறிது பிசகினாலும் முதுகில் அடித்து சதையைத்தீய்த்து விடும். அபாயம் எதில்தான் இல்லை.

ஆனால் ஏனைய வெளிச்சங்களற்ற சுத்தமான இருட்டில் தன்னைச்சுற்றி ஒரு கோடி மின்மினிப்பூச்சிகளாய் தீப்பொறிகள் தெறிக்க, கார்த்திகை சுற்றும் போது வரும் கொண்டாட்டம் இருக்கிறதே....அடடா...!!!

இழப்பின் நினைவுகள் கூட மகிழ்ச்சிதான்...

நம் நகர வாழ்க்கை தின்று ஏப்பம் விட்டவை இன்னும் ஏராளம்.





Wednesday, 30 October 2013

தீபாவளி



    அப்போதெல்லாம் கிட்டத்தட்ட இரண்டுமாதங்களாக காத்திருப்போம் தீபாவளிக்காக. ஒவ்வொரு நாளாக கவுண்டவுனில் குறையும். என்ன என்ன பட்டாசுகள் வாங்கவேண்டும் என ஒரு பெரிய பட்டியல் தயாரிப்போம்.

    சீனி வெடி, ஊசி வெடி, அணுகுண்டு, ஏரொப்ளேன், சங்குசக்கரம், புஸ்வாணம், மத்தாப்பு, வெடி மத்தாப்பு,சாட்டை, பென்சில், சணல்வெடி, குருவி வெடி, லக்ஷ்மி வெடி, பாம்பு மாத்திரை, கலர் கல், பொட்டுவெடி, சுருள்கேப், துப்பாக்கி என பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஒவ்வொன்றிலும் எத்தனை வேண்டும் என கணக்கெடுப்போம். தீபாவளிக்கு பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் போது பட்டாசு வந்துவிடும். சிதம்பரத்திற்கு சென்று அப்பா வாங்கி வருவார்கள். நேரம் நெருங்க நெருங்க சந்தோஷத்தில் நெஞ்சு படபடக்கும். கண்கள் மின்ன பட்டாசுப் பொட்டலத்தை பிரிப்போம். சில வெடிகள் கிடைத்திருக்காது, சிலவை எதிர்பாராமல் கிடைத்திருக்கும். இதற்கிடையில் என் தாய்மாமா வேறு பட்டாசு வாங்கி
வருவார்கள்.எவ்வளவுதான் வாங்கி வந்திருந்தாலும் குறைவாகவே தோன்றும்.

    எல்லாவற்றையும் ஒரு ஈச்சந்தட்டில் பரப்பி வெயிலில் காயவைப்போம். நிறைய நாட்கள் ஐப்பசியில் மழை என்பதால் வெய்யிலே இருக்காது. அந்த நாட்களில் இரவு படுக்கும்போது மண் அடுப்பைச்சுற்றி காயவைப்பதுண்டு. பகல் முழுவதும் எரிவதால் இரவு நெருப்பை அணைத்தபின்னரும் நன்றாக சூடு இருக்கும். நடு இரவில் தூக்கத்திலிருந்து எழும்போது அடுப்படிக்கு வந்து தோசையை திருப்பி போடுவதுபோல் வெடிகளை திருப்பிவைப்போம்.

    அப்படி இப்படியென்று வந்தே விடும்.

    நாளை தீபாவளி என்றால் இன்றுஇரவு சிவராத்திரிதான். தூக்கமே வராது. எப்பொழுது விடியும் என காத்திருந்து காத்திருந்து எப்படியோ தூங்கிவிடுவோம். வீட்டுப்பெண்களுக்கு இரவு நெடுநேரம்வரை வேலை இருக்கும். இட்லி,வடைக்கு மாவு அரைத்தல், சுழியன், பால்பலகாரத்திற்கு தயார் பண்ணுவது என்று ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டிருப்பார்கள். நாளைக்கு காலை நான்கு மணிக்கெல்லம்

எழுப்பிவிடவேண்டுமென கட்டளை போட்டுவிட்டுத்தான் படுக்கச்செல்வோம். அப்புறம், யார்தான் ஊரில் முதல் வெடியை வெடிப்பதாம்?

    நான்கு மணிக்கு என்னை எழுப்பிவிடும்போதே வடை, சுழியன் வாசம் மூக்கை துளைக்கும். அவசர அவசரமாக ஆயா இல்லை அப்பா கையால் எண்ணை தேய்த்துக்கொண்டு குளித்து ரத கஜ துரக பதாதிகளோடு போருக்கு தயாராவோம். வாணலியிலிருந்து வடையை குத்தி எடுக்கும் ஒரு கம்பி இருக்கும். அதுதான் எனது முதல் ஆயுதம்.

    சீனி வெடி என்று சொல்வோம். செங்கோட்டை படம் போட்ட சிவப்பு சரவெடிகள். அவைபோன்று உதிரிகளாகவும் பாக்கெட்டில் கிடைக்கும். ஒவ்வொன்றாக எடுத்து வடைகம்பியின் பின்புறம் குத்தி விளக்கில் காட்டி வெடிப்போம். ஒரு ஐம்பது வெடி வீரர்களை கொன்று குவித்துவிட்டு சாமி கும்பிடச்செல்வோம்.

    நாள் முழுக்க வெடிகளும், தின்பண்டங்களும் தான்.

வெங்காயவெடி என்று உண்டு. பூண்டு வெடி என்றும் சொல்வார்கள். கற்களுகிடையில் கந்தகப்பொடியை நிரப்பி வண்ணக்காகிதத்தால் முடிச்சிட்டு பார்க்க வெங்காயம்,பூண்டு மாதிரியே இருக்கும். இப்போது அதெல்லாம் கிடைகிறதா,தெரியவில்லை. ஓங்கி தரையில் அடித்தால் சத்தம் கேட்கும். அதை கொஞ்சம் அள்ளி கால்சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஊர்சுத்துவோம். கதவுக்கு பின்னே மறைந்துகொண்டு யாராவது வரும்போது இந்த வெடியை வெடித்து கலவரப்படுத்துவதுண்டு.

    பொட்டு வெடி வெடிக்க துப்பாக்கியைத்தவிற நாங்களாக தயாரிக்கும் ஆயுதங்களும் உண்டு. இரண்டு வாஷர்களை ஒரு போல்ட்டில் சொருகி நட்டு திருகி அதில் கம்பியால் ஒரு கைப்பிடி செய்து, இரண்டு வாஷர்களுக்கு நடுவில் பொட்டுவெடிகளை அடுக்கி, நட்டைத்திருகி ஓங்கி அடித்தால் ஒரு சீனி வெடிக்குச்சமம். இதே டெக்னாலஜியில் ராக்கெட்டும் உண்டு. ஒரு பிளாஸ்டிக் ராக்கெட்டில் இதே வாஷர் அமைப்பு இருக்கும். அதில்
பொட்டு வெடியை வைத்து உயரே தூக்கிப்போட்டால், பூகோள விசையின்
கோட்பாடுகளின்படி தலைகீழாக கீழே வந்து மோதி வெடிக்கும்.

    யார் வீட்டில் அதிக பட்டாசு காகிதக்குப்பை இருக்கு என்பதிலும் போட்டி உண்டு. இதற்காக லஷ்மி வெடியின் மேல் நிறைய காகிதங்களை சுற்றி பற்றவைப்போம்.

    வெடிக்காத வழிமுறைகள் இல்லை. கொட்டாங்குச்சியினை வெடியின் மேல் கவிழ்த்தும், ஈர மண்ணில் புதைத்து யாராவது வரும்போது பற்றவைத்தும், வத்தில் ஓரத்தில் திரியைக்கட்டி டைம் பாம் ஆகவும் ஏகப்பட்ட வழிமுறைகள் உண்டு.

    உள்நாட்டு சரக்காகிய, நாட்டு வெடி, ஓலை வெடி, சணல் வெடிகளும் உண்டு. ஒவ்வொரு நாட்டு வெடியும் ஒரு அணுகுண்டிற்குச்சமம்.

    அப்பாவின் பால்ய காலங்களில் நிறைய பொட்டு வெடிகளும், ஒரு புஸ்வாணம், ஒரு சங்குசக்கரம் தான் வாங்கித்தருவார்களாம் எனது தாத்தா.  இதைவிட பெரிய கட்டுரை எழுதுமளவிற்கு எந்து அப்பா அவர்களுடைய கதைகளைச் சொன்னார்கள்.

    பணத்தில் குறைவாயும், மகிழ்ச்சியில் நிறைவாயும் வாழ்ந்த நாட்கள் அவை.




Monday, 28 October 2013

தேன்சிட்டு



தேன்சிட்டு தெரியுமா?

இன்று வீட்டிற்குள் வந்தது. வெளிர் பச்சையும் ஆலிவ் பழுப்புமாய்,ஒரு குழந்தையாக. பிறந்து கொஞ்சநாளே ஆன, அதிக தூரம் பறக்கத்தெரியாத ஒரு அப்பாவியாய். எப்படியோ எங்கிருந்தோ பறந்து வந்து எங்களின் சமையலறைப் பரணில் உட்கார்ந்திருந்தது.

மகள் வந்து சொன்னாள்.

“அப்பா.. அப்பா.. நம்ம கிச்சன்ல ஒரு பறவை வந்திருக்கு. நானும் தாத்தாவும் அதுக்கு ஃபுட் வச்சோம். நீங்க வேணும்னா வந்து பாருங்களேன்.”

நிஜமாகவே பறவை என்றுதான் சொன்னாள். சுட்டி டிவியால் ஒரு நன்மை. சில நல்ல தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டிருக்கிறாள்.எப்போதும் விளையாட்டாய், ஏதாவது கதை விடுவாள். அதைப்போலத்தான் இதுவும் என்று எண்ணி,

” என்ன? பிளாஸ்டிக் குருவியா?” எனக்கேட்டேன்.

“இல்லப்பா. நெஜமா வந்திருக்கு” என்றாள்.

கையப்பிடித்து இழுத்துச்சென்றாள். மெல்லியதாக கீச் கீச் என்று கத்திக்கொண்டு பழக்கமில்லாத இடத்தின் பயத்துடன் உட்கார்ந்திருந்தது.

சந்தோஷம், ஆச்சரியம் எல்லாம் கலந்த கலவையாய் பார்த்தேன். சென்னை வந்த இந்த பதினேழு வருடங்களில் ஒரு தேன்சிட்டை இவ்வளவு அருகில் இப்போதுதான் பார்க்கிறேன்.

அருகில் என்ன...முதன் முதலாக என்று கூட சொல்லலாம். எங்கள் கிராமத்தில் அடிக்கடி பார்க்கும் குருவிதான். கிட்டத்தட்ட எல்லார் வீட்டிலும் வாசற்படி அருகே நெற்கதிகளைக்கொண்டு கொத்தாகக்கட்டித்தொங்க விட்டிருப்பார்கள். குருவிகளுக்காகவே. அவ்வப்போது இவை வந்து நெல்மணிகளை கொறித்து விட்டு செல்லும். தின்றுவிட்டு போட்ட நெல்லின் தோல்கள் வாசற்படியில் இரைந்து கிடக்கும்.

இங்கு தட்டில் வைத்த பொட்டுக்கடலையை அது சாப்பிடவே இல்லை. பசியைவிட உயிர் தப்பித்தலே முக்கியமென நினைத்திருக்கலாம்.

வீட்டிலுள்ள அனைத்து மின்விசிறிகளையும் நிறுத்திவிட்டேன். அதற்கு வெளியே செல்லும் வழி தெரியவில்லை. எப்படியாவது பிடித்து வெளியே விட்டுவிடலாம் என்று அக்வாரிய மீன் வலையால் பிடித்தேன். இடுக்கு வழியாக பறந்து வெளியே சென்று படியில் அமர்ந்தது. அதிக தூரம் பறக்கமுடியவில்லை. மாடி கைப்பிடி சுவற்றில் அமர்ந்து கொண்டது. வேறு
எதாவது பெரிய பறவையால் இதன் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனக்கருதி பிடித்துவைத்து ஒரு வாரம் கழித்து விட்டுவிடலாம் என நினைத்தேன். இதை வைக்க கூடு எதுவும் இல்லை என்பதால் ஏதொ ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு மூடி வைத்து பிறகு கூண்டில் வைக்கலாம் என்று வாளி எடுக்க கீழே சென்றேன்.

மறுபடி மேலே வந்து பார்த்தபோது குருவி அங்கே இல்லை. 

Friday, 25 October 2013

அது ஒரு மழைக்காலம் - 3





பள்ளி நாட்களில் மழை என்பது ஒரு குதூகலம்.

எங்களது கூரைப்பள்ளிக்கூடம். பன்னிரெண்டாவது வரை கூரை தான். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளி. ஆறிலிருந்து பன்னிரெண்டு வரை வேறு பள்ளி. ஆரம்பப்பள்ளியில் தரையில்தான் அமரவேண்டும். ஐந்தாம் வகுப்பு வரும் போது பலகை போட்டிருப்பார்கள். உயரிநிலைப்பள்ளியில் எட்டாவதிலிருந்துதான் பெஞ்ச் போட்டிடுப்பார்கள். ஆறு, ஏழாம் வகுப்புகள் தரைதான்.

கூரை என்பதால் மழை பெய்யும்போது அங்கெ அங்கே ஒழுகும். ஒரு வகுப்பில் இரண்டு, மூன்று இடங்களிலாவது ஒழுகும்.பாதி பேருக்கு உட்கார இடம் இருக்காது. முண்டி அடித்துக்கொண்டு உட்காருவோம். சில நேரங்களில் இன்னொரு செக்‌ஷனில் போய் உட்கார சொல்வார்கள். நனைந்துவிடும் என்பதால் புத்தகத்தையோ, நோட்டையோ திறக்கமுடியாது. அதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்தமாட்டார்கள். வெளியில் மழை.  பாடங்கள் இல்லை. இதைவிட வேறென்ன வேண்டும் எங்களுக்கு? அங்கேதான் சந்தோஷம் ஆரம்பம்.

அந்த நேரங்களில் ஆசிரியர்களை கதை சொல்லச்சொல்வோம். நாங்களும் சொல்வோம். ஆசிரியர்கள் எங்களை யாரையாவது பாடச்சொல்வார்கள். வகுப்பில்தான் எத்தனை ’எஸ்பிபி’ க்கள், ’மனோ’க்கள். எத்தனை ’ஜானகி’கள், ’சித்ரா’க்கள். வகுப்பறையே ரெக்கார்டிங் ஸ்டுடியோ. லஞ்ச் பாக்ஸே மிருதங்கம்.

மழை தொடரும் என தெரிந்தால் அரைநாளோடு விடுமுறை விட்டுவிடுவார்கள். மழை பெய்யவேண்டுமென்பதில்லை. காலையில் வானம் இருட்டிக்கொண்டு வந்தாலே போதும். அரைநாள்தான். டிங்..டிங்..டிங்..டிங்..டிங்...... என மணி அடிக்கும் நேரம்தான் காதில் தேன் வந்து பாயும் நேரம். ஓ....... என்று கத்திக்கொண்டே ஓடும் அந்தச்சத்தம் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வகுப்பறை மழை நாட்களில் ஈரமாக இருக்கும். நீண்ட வராண்டாக்களில்தான் வகுப்புகள் இருக்கும். மதிய உணவு இடைவேளையில் அனைத்து வகுப்புகளும் கலைந்துவிடுமென்பதால் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு ஓடிவரலாம். அப்படி ஓடி வந்து ஈர சிமெண்ட் தரையில் சட்டென பிரேக் அடித்து நிற்போம். ஏகப்பட்ட இயற்பியல் கோட்பாடுகளின் படி உடல் உடனே நிற்காது. தரையில் ஈரமென்பதால் ஐஸ் ஸ்கேட்டிங் போல பத்து பதினைந்து அடிதூரத்திற்கு வழுக்கிச்செல்வோம். எனது பால்ய நண்பன் மனோகரன் இந்த ஸ்கேட்டிங்கில் பிரபலம்.

அப்போது கிடைத்த பொருளெல்லாம் விளையாட்டுக் கருவிகள். பார்த்த இடமெல்லாம் விளையாட்டு களங்கள். இப்போதோ எல்லாமே கிடைக்கிறது. நமது குழந்தைப்பருவத்தைத் தவிர.

Wednesday, 23 October 2013

பாம்பு





பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். நிஜம். 

என்னதான் விஷமில்லா பாம்பென்றாலும், மண்புழு அளவேதான் என்றாலும் வீட்டிற்குள் வந்துவிட்டால் உதறல்தான். பாம்பின் பயம் இல்லாதவர்களே இல்லை என சொல்லிவிடலாம். சிலபேர் பாம்புப்பண்ணையில் பல் 
பிடுங்கப்பட்ட பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அப்பா.....!!! என்ன ஒரு தைரியம் என நமக்கு தோன்றும். அவர்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை உற்றுப்பார்த்தால் 
தெரியும்,எதையோ சாதித்த வெற்றிக்களிப்பும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சிறிய பயமும்.

கிராமத்தில், சிறியவயதில்  பாம்புகளை பார்க்காத நாட்களே இல்லை எனலாம். எங்கள் ஊர் இரண்டு பகுதிகளாக இருக்கும். பழையூர், புதூர் என்று. நாங்கள் இருந்தது புதூரில். புதூர் வெறும் இரண்டே தெருக்களைக்கொண்டது. 
சுற்றிலும் வெறும் வயல்கள், தோட்டங்கள், தோப்புகள். ஊருக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு வாய்க்கால்கள். ஊருக்கு வெளியே வெள்ளாறு. அதனால் பாம்புகளுக்கு பஞ்சமில்லை.

நல்லபாம்பு, சாரப்பாம்பு, கட்டுவிரியன், தண்ணிப்பாம்பு, கொம்பேரிமூக்கன்,மன்ணுளிப்பாம்பு,பச்சைப்பாம்பு இன்னும் எத்தனையோ பேரில்லாத அல்லது பெயர் தெரியாத பாம்புகள். 

நல்லபாம்பு கடவுளைப்போல. கொல்லமாட்டார்கள். யாரையும் தொந்தரவு செய்யாதவரை. ஆனால் வீட்டிற்குள் வந்துவிட்டால் கடவுளுக்கு கூட 
அடிதான். வேறு வழியில்லை. நமது கதைகளிலும்,காவியங்களிலும் கூட பாம்பிற்கு ஒரு இடம் உண்டு. 

ஓலாலக்குட்டி என்று ஒரு பாம்பு. அதன் உண்மையான பெயர் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. அதனுடைய சுவாரசியமே எண்ணிக்கைதான். ஒரு பாம்பு வந்தது. அடித்துக்கொன்றோம் என இருக்காது. ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒருமணிநேர இடைவெளியில் ஒரு முறை ஏழு ஓலாலக்குட்டிகளை அடித்துப்பார்த்திருக்கிறேன். மொத்தமாகத்தான் வெளியே இரைதேட செல்லுமா என தெரியவில்லை. ஆனால் நிறைய வரும். யாராவது ஒரு பாம்பை அடித்துவிட்டால், இன்னும் சில பாம்புகளுக்காக காத்திருந்ததுண்டு.

 தவமாய் தவமிருந்து சினிமாவைப்போல அப்பாவுடன் பள்ளிக்கு மிதிவண்டியில்தான் செல்வேன். வாய்க்கால் ஓரமாகத்தான் செல்லவேண்டும். மூன்று கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள பள்ளிக்கு செல்லும்வரை வாய்க்காலில் எத்தனை தண்ணிப்பாம்புகள் நீந்துகின்றன என எண்ணிப்பார்ப்பது எனது தினசரி பொழுதுபோக்கு. மூன்று, நான்கிலிருந்து எட்டு அல்லது பத்து வரைகூட எண்ணியதுண்டு. இந்த வாய்க்காலில் தான் விடுமுறையில் தாவிக்குதித்து குளிப்போம்.

 பாம்புகள் குட்டி போடுவதும் உண்டு. முட்டை இடுவதும் உண்டு. ஒருமுறை நானும் எனது நண்பனும் ஏதொ ஒரு ஞாயிற்றுக்கிழமை கல்லெறிந்து கிடைத்த பக்கத்துவீட்டு நெல்லிக்காயை சுவைத்துக்கொண்டே வீட்டிற்குப்பின்னால் இருக்கும் கன்னிவாய்க்கால் பக்கமாக சென்றோம். கன்னிவாய்க்கால் என்பது பெரிய வாய்க்காலின் கிளை. அகலம் குறைவாக இருக்கும். ஒரு எட்டில் தாண்டிவிடலாம். அங்கே பனைமரத்தடியில் 
மண்ணை நோண்டியபோது கிடைத்த முட்டையை உடைத்துப்பார்த்தோம். உள்ளே கொழகொழவென்ற திரவத்தில் பிறக்காத குழந்தையாக குட்டிப்பாம்பு. அம்மா பாம்பு வந்துவிடும் என பயந்துகொண்டு எடுத்தோம் ஓட்டம். 

யாரையும் கடிக்காத நல்லபாம்பின் விஷம் நாளைடைவில் மாணிக்கமாகும். இரவில் இரை தேட செல்லும் போது வெளிச்சத்திற்காக அதை கக்கும். அப்போது அதன் மேலே சாணி உருண்டையை போட்டு மாணிக்கத்தை 
எடுக்கலாம் என ஒரு கதை உண்டு. இப்போது கூட வயதான கிராமவாசிகள் இக்கதையை உண்மை என நம்புவதுமுண்டு. 

பாம்பை பிடிக்க சுளுக்கு இருக்கும். ஒரு மூங்கில் கழியின் முனையில் இரும்பில் அம்பு மாதிரி சொருகியிருப்பார்கள். அதை வைத்து குத்திப்பிடிப்பதுண்டு. புற்றுகளில் இருக்கும் பாம்பை இருளர்கள்தான் 
பிடிப்பார்கள், அதன் தோலுக்காக.  எங்கள் ஊரிலேயே ஒரு இருளர் குடும்பம் இருந்தது. ரோவம்பா என்று ஒரு பாட்டி இருந்தது அந்த குடும்பத்தில். மிகவும் இலாவகமாக கையாலேயே பிடித்துவிடும். 

இப்போதெல்லாம் கிராமத்தில் கூட பாம்புகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அழிந்துபோன தோப்புகளாலும், வற்றிப்போன ஆறு,வாய்க்கால்களாலும், எலிகளுக்காக வயலைச்சுற்றி போடப்பட்ட மின்சாரக்கம்பிகளில் அடிபட்டும் உணவிழந்தும் சற்றேறக்குறைய அழிந்துவிட்டன.

வயல்கள்,  எலிகள், பாம்புகள், பருந்துகள் என்ற உயிர்சுழற்சியின் குரல் வளையை நாம் எப்போதோ நெறித்து விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, காத்திருக்கிறோம் வேறெதையோ அழிக்க.




Tuesday, 22 October 2013

கதையல்ல நிஜம்





"ஐயோ...ஐயோ.. என் தலைல கல்ல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டாளே... நான் என்ன பண்ணுவேன். யாராவது ஓடியாங்களேன்.. நான் என்ன பண்ணுவேன்".

"என்ன அங்க சத்தம்..."

"என்னடி ஆச்சு... "

"பாருங்க... பாழா போனவ தூக்கு மாட்டிகிட்டா. "

"அய்யய்யோ...என்னடி கொடும இது... ஏண்டி இப்படி பண்ணின..."

"யாராவது ஆம்பளைங்க இருக்காங்களா பாருங்க வெளில...யாராவது வாங்களேன்... "

"கீழ இறக்கு மொதல்ல. பாத்து..."

"தூக்க முடியலியே.."

"இந்தா.. அப்படியே கால பிடி....மெதுவா மெதுவா..."

"டேய் டேய்.. இரு.. இரு.. அந்த ஸ்டூல நிமித்தி போட்டு மேல ஏறி பிடிச்சுக்கோ..."

"ம்ம்ம்.. மெதுவா... அப்படியே சாய்ச்சு உக்கார வைங்க..."

"மூச்சு இருக்கா பாரு..."

"இப்படி பண்ணிட்டு போயிட்டியேடி படு பாவி.. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்.."

"யாராவது துணி எடுத்து மூஞ்சிய தொடைங்க... நொரையா வழியுது பாரு."

"ஏய் பாப்பா.. நீ வெளில போய் வெளையாடு.... போ னு சொல்றேன்ல."

"கார் எடுத்துகிட்டு வர சொல்லுங்க... ஆஸ்பித்திரிக்கு போலாம்.."

"இனிம போயி என்ன பண்ணுறது.. அதன் போய்டுச்சே எல்லாம்.."

"ஏண்டி இப்படி பண்ணினா இவ..."

----------------------------------------------------------------------------------------

"என்ன? பயமா இருக்கா?"

"........"

"என்னாச்சு சொல்லு. இம்மாந்தூரம் வந்துட்டு பேசாம இருந்தா?"

"நான் ட்யூஷன் போயிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருப்பாங்க எங்க வீட்ல."

"ம்ம்ம். அதுக்கென்ன இப்ப.? அது தெரிஞ்சதுதான."

"எனக்கு பயமா இருக்கு."

"நீ வேணா போயிடுறியா"

"இல்ல..நான் போல."

"இதுலாம் மின்னாடியே பேசனதுதான? அப்போ தலையாட்டிட்டு இப்போ பயமாருக்குன்னா? ரிஜிஸ்டார் உக்காந்துருக்கார். வா போலாம்."

"தாலி வச்சு இருக்கியா?"

"ஆமாம். இங்க கையெழுத்து போட்ட உடனே கோயிலுக்கு போறோம்."

"அங்கலாம் வேணாம். பயமா இருக்கு. இங்கயே கட்டிக்கலாம்."

"கட்டிக்கிட்டு வீட்டுக்கு போம்போது அவுத்து வச்சுடுவியா? அப்புறம் எதுக்கு இப்படி பயந்து சாவுற?"

"தோ பாரு. ரொம்ப அலட்டாத. அவ்ளோ பயம் இருந்த இங்க ஏன் வரேன்.
பின்ன என்ன?"

"எப்படியும் முழு பரிட்ச முடியற வரைக்கும் எங்க வீட்லதான் நான் இருந்தாகணும்.அதுவரைக்கும் எப்படி தெரியாம பாத்துகறதுதான்னுதான்."

"சரி.தாலி வேணாம். கையெழுத்து மட்டும் போட்டுட்டு நீ போ.. மத்ததெல்லாம் உனக்கு பரிட்ச முடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்."

"ம்ம்ம்.."

"யாரு.. நீங்கதான் பொண்ணு மாப்ளையா? மாலை கூட வாங்கலியா?"

"இல்ல சார். கோயில்ல போட்டுக்கலாம் னு இருந்தோம்."

"வீட்ல யாருக்கும் தெரியாதா?"

"தெரியாது சார்."

"ஏன்மா...சாதி உட்டு சாதி மாறி கல்யாணம் பண்ணிகிறிங்க.. உங்க அப்பன் என்ன வெட்டிட போறார்.சரி சரி..இங்க கையெழுத்து போடுங்க..நீயும் இங்க போடுப்பா."

"ம்ம்ம்.. ம்ம் . நல்ல இருங்க..யாருப்பா சாட்சி கையெழுத்து?"

"இங்க போடுங்க.."

------------------------------------------------------------------------------------

"எல்லாம் அந்த கொலைகார பாவியால வந்தது....கட்டைல போக... அவனுக்கு என் பொண்ணுதான கெடைச்சா..."

"என்னாதாண்டி ஆச்சு... ஏதாவது திட்டுனியா.."

"ஆமாம் நீ வேற.. அவள போய் நோண்டி நோண்டி கேட்டு கிட்டு...ஊருக்கே தெரிஞ்சு போச்சு...அந்த கட்டையன் மவனும்,தோ மாட்டிகிட்டாளே இவளும் திருட்டு கண்ணாலம் பண்ணிகிட்டாங்க."

"அம்மாடி... யாரு...நம்ம பஞ்சாயத்து தலைவர் வீட்ல பண்ணை வேல செய்றானே அந்த கட்டையன் மவனையா சொல்றே."

"ம்ம்ம்.. அந்த தடிப்பயதான்....கெராப்பு வெட்டிகிட்டு அவன் சைக்கிள் ல சுத்தும் போதே தெரியும் இப்படி ஏதாச்சும் பண்ணுவான்னு."

"அந்த கம்னாட்டிக்கு எங்கேயிருந்து வந்துச்சு இவ்ளோ திமிரு...."

"அவன விடு.. அவன்தான் அப்படின்னா இந்த மூதேவிக்கு எங்க போச்சு புத்தி?"

"நீ வேற.. இருடி.. இவளே பொண்ண பறிகொடுத்துட்டு நிக்குறா... இப்ப போய் திட்டிகிட்டு..."

"திட்டட்டும் ஆத்தா... அவங்க சொல்றது சரிதானா...இவளுக்கு எங்க போச்சு புத்தி... நாங்க இவளுக்கு என்ன கொறை வச்சோம்...
கேட்ட துணி மணிலாம் வாங்கி குடுத்தேன்... படிக்கணும்னா .. பஸ் ஏத்தி போய் பட்டி னு அனுப்ச்சி வச்சேன்..இப்படி ஓடுகாலிய வந்து நிப்பான்னு தெரியாம போச்சே.... தெரிஞ்ச உடனே வெளக்குமாத்தால ரெண்டு போட்டேன்...கோவம் வராதா?இனிமே நான் எப்படி ஊரு மொகத்துல முழிப்பேன். என் ஊட்டுக்கு சாணி வார்ற பயலாம் என்ன மொறை சொல்லி கூப்பிடுகிட்டு வருவானுங்களே... தோட்டத்துப்பக்கம் போயிட்டு வரதுக்குள்ள இப்படி ப்பன்ணிகிட்டளே படு பாவி..
ஆயுசுக்கும் எங்கள தல நிமிர உடாம பண்ணிட்டாளே..."

"சரி.. சரி.. உடும்மா... என்னமோ நேரம்..விதி.. யாரு உயிரை யாரு புடிச்சு வைக்க முடியும்."

"அந்த பொறுக்கி பரதேசிய கொன்னாதான் என் கோவம் தீரும்.."

"அட.. நீ வேறப்பா... அவன கொன்னாக்கா உன் மொவ வந்துடுவாளா?... ஆக வேண்டியத பாருங்க.."

"எவனோ போலீஸ் ல சொல்லிட்டான் போலருக்கு... போஸ்ட்மார்டம் பண்ணனும்குறாங்க..."

"அய்யோ ... வேணாம் சார்... முழுசா உயிரோடதான் இல்ல. முழுசா போதைக்கவாவது உடுங்க சார்."

"நான் என்னமா பண்ண முடியும்...இந்த வழியாதான் ஏசி போய்ருகாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. அவருதான் என்ன அனுப்பினாரு... நீங்க ஒண்ணும் கவலை படாதிங்க... இதெல்லாம் பார்மாலிட்டி. ரொம்ப ஒண்ணும் சேதம் இல்லாம பாத்துக்கலாம். கொஞ்சம் காசு செலவு பண்ணினா கேசு ஏதும் இல்லாம பண்ணிடலாம். தவறி உழுந்துதான் செத்து போச்சுன்னு எழுதி குடுத்துடுவார். எனக்கு தெரிஞ்சவர் தான்..பாத்துக்கலாம். அந்த சைடு ஆளுங்கள நான் பாத்துகறேன்.."

----------------------------------------------------------------------------------------

அதற்கப்புறம் எல்லா செயல்களுமே இயல்பாகத்தான் நடந்தது...தீயின் கோர பிடியில் அவளது தேகம் போசுங்கிக்கொண்டிருந்தது..அவளது தந்தையின் கண்களில் இருந்த வெறுமைக்கு மட்டுமே தெரியும் அந்த உண்மை...

அது தற்கொலையல்ல என்பது..

(என்றோ எழுதியது... ஒரு மீள்பதிவு...)

Monday, 21 October 2013

அது ஒரு மழைக்காலம் -2



      சுத்தமாக சூரியனை பார்க்க முடியாது. விடியல் காலை எப்படி இருக்குமோ அந்த அளவு வெளிச்சம் தான் பகல் முழுக்க இருக்கும்.விடாமல் மழை தூறிக்கொண்டே இருக்கும். வெளியில் சென்று விளையாடவும் முடியாது. கொஞ்சநேரம் கப்பல் விடுவொம். மழையில் நனையாதே என்று வழக்கம் போல அம்மா, ஆயா, அப்பா யாரிடமிருந்தாவது திட்டுக்கள் கிடைக்கும். வேறு வழி இல்லை. வீட்டுக்குள் செல்லத்தான் வேண்டும்.

     எங்கள் வீடு சிமெண்ட் தரை போட்ட ஓட்டு வீடு. மண்தரை போட்டு இருக்கும் கூரை வேய்ந்த வீடுகள் தான் மழைக்காலங்களுக்கு உகந்தவை. அதிக வெப்பமோ அதிக குளிரோ உள்ளே வராது. மழைகாலங்களில் சிமெண்ட் தரை வேர்க்கும். கழுவிவிட்டு அங்கங்கே காய்ந்தது போல் ஈரமாக இருக்கும். அந்த ஈரத்தில் நடந்துகொண்டே இருந்தால் சளி பிடித்துக்கொள்ளும், வழுக்கி விழநேரிடும் என நடப்பதற்காக மரப்பலகைகளும், சாக்குகளும் போட்டு வைத்திருப்பார்கள். அதன் மேல் நடக்கவில்லையெனில் மறுபடி திட்டு. 

     லேசான தூறலென்றால் வெளியில் விளையாடலாம். மழை கொட்ட ஆரம்பித்துவிட்டால் வீட்டிலிருப்பதைத்தவிற வேறு வழியில்லை. திண்ணையின் மரச்சட்டங்களின் வழியாக மழையை வேடிக்கை பார்ப்பது ஒரு குதூகலம். அப்போது ஒரு சிலரிடம் தான் குடை இருக்கும். மற்றவர்கள் சாக்குகளை உட்புறமாக முக்கோணமாய் மடித்தோ அல்லது சம்பங்கூடுகளிலோ வெளியில் செல்வார்கள். சம்பு என்பது குச்சி குச்சியாக இருக்கும். அதை மூன்று அல்லது நான்கு அடிகளில் சீராக நறுக்கி சணலோ, கயிறோ வைத்து பின்னி உடம்பை மறைக்கும் வடிவத்தில் செய்திருப்பார்கள். அதை தலையில் கவிழ்த்துக்கொண்டால் முழங்கால் வரை நனையாது. அப்போதே Eco Friendly. இயற்கையை மதித்தது மட்டுமல்ல, கடவுளாக்கி வழிபட்டோம்.

     மழைக்காலங்களில் தான் வீட்டுக்குள்ளே விளையாடும் விளையாட்டுக்கள் பிரபலம்.  ஹை ஸ்கூல் போகும் போதுதான் செஸ், கேரம் எல்லாம் வந்தது எங்கள் வீட்டிற்கு. அதற்கு முன் ஒரிஜினல் அக்மார்க் கிராமத்து விளையாட்டுகள் தான்.பல்லாங்குழி, தாயக்கட்டை, ஆடு புலி ஆட்டம், ஒத்தையா ரெட்டையா? ஏழாங்காய், கூட்டாஞ்சோறு இப்படி. அந்த விளையாட்டுளைப்பற்றியே தனியே எழுதலாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில்.

     ஈச்சம்பாய் ஒன்று இருக்கும் எங்கள் வீட்டில். ஈச்சமர சோலைகளில் சிறிது சிறிதாக பின்னி, பின் அனைத்தையும் ஒன்றாக இணைத்து பாய்வடிவில் செய்திருப்பார்கள். இப்போதைய பிளாஸ்டிக், கோரைப்பாய்களுக்கெல்லாம் முன்னோடி. நெல்லோ, வேறு தானியங்களோ வெயிலில் காய வைப்பதற்காக வைத்திருப்பார்கள். வீட்டின் கூடத்தில் பாதி அளவிற்கு இருக்கும். அதை விரித்து அதன் மேல் கோரைப்பாயைபோட்டு உட்கார்ந்து கொள்வோம். சூடாக முறுக்கு, காராபூந்தி என்று ஏதாவது செய்து தருவார்கள்.இடி சத்தத்திற்கு பயந்துகொண்டு அர்ச்சுனா அர்ச்சுனா என சொல்லிக்கொண்டு மூலையில் ஒட்டிக்கொள்வோம். 

     அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தாராம். அந்தத்தவத்தின் ஆக்ரோஷத்தினால் சிவனால் ஒரு இடத்திலும் அமைதியாக இருக்க முடியவில்லை. தவத்தை கலைக்க என்னென்னவோ செய்கிறார் சிவன். மழையை அனுப்புகிறார், முடியவில்லை. செல்லை அனுப்பி தரையை அரிக்கச்செய்கிறார், முடியவில்லை. இடி பகவானை அனுப்புகிறார். அர்ச்சுனன் இடிபகவானை பிடித்து அக்குளில் வைத்து அழுத்திப்பிடித்துக்கொள்கிறார். அவருக்கு முழி பிதுங்கி என்னை விட்டுவிடு, நான் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன் என கதறுகிறார். உடனே அர்ச்சுனன் என்னை மட்டுமல்ல, என் பேரை சொல்பவர்களை கூட நீ நெருங்ககூடாதென்கிறார். நிபந்தனையை ஒத்துக்கொண்டு விடிதலையாகிறார் இடிபகவான்.

     மழையின் குளிருக்கு, ஆயாவிடம் கதைகளை கேட்டுக்கொண்டு சுடச்சுட முறுக்கு சாப்பிட்ட நாட்கள் அவை.

அது ஒரு மழைக்காலம் - 1





அப்போதெல்லாம் மழை கொட்டித்தீர்க்கும்.  ஐப்பசி மாதம் வந்துவிட்டாலே மழைதான். உங்க வீட்டு மழை, எங்க வீட்டு மழை இல்லை. மழை ஆரம்பித்தால் சில நாட்களுக்கு நீடிக்கும். பெருமழையாகவும் இருக்காது. லேசாக தூறிக்கொண்டே இருக்கும், நாட்கணக்கில், வாரக்கணக்கில் கூட.

மழை என்றதுமே முதலில் ஞாபகம் வருவது எங்களின் காகிதக்கப்பல்கள்தான்.சாதாரணக்கப்பல், கத்திக்கப்பல்,மாடிக்கப்பல் இரட்டை ராஜா - ராணிக்கப்பல் என்று நிறைய வகை உண்டு. தரையில் நேராக நிற்கமுடியாத கத்திக்கப்பல் நீரில் சாயாமல் மிதப்பது ஓர் அதிசயம்.

அப்போது நான்காவது அல்லது ஐந்தாவது படித்துக்கொண்டிருந்திருப்பேன்.
எங்கள் வீடு தெருவின் நடுவில் இருக்கும். தெரு முழுக்க ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும்தான்.

தெருவில் மழைத்தண்ணீர் பிறந்து சிறிது நேரமே ஆன கன்றுக்குட்டி போல ஒரு துள்ளலுடன், மேற்கிலிருந்து கிழக்காக, சந்தோஷமாக சலசலத்து ஓடிவரும். அதே கன்றுக்குட்டியின் சந்தோஷத்துடனே நாங்களும் கப்பல் விட ஓடுவோம். ஒவ்வொரு வீட்டின் முன்னரும் எனது கூட்டாளிகள் கப்பலுடன் இருப்பார்கள். ஒரே நேரத்தில் கப்பல் விட்டு யாருடையது முன்னால் செல்கிறது என்ற போட்டிகளும்,  நடுவே சிறு கற்களை, மரக்குச்சிகளை வைத்து நீரோட்டத்தின் போக்கை மாற்றி கப்பலை திசைதிருப்புதலும் உண்டு. மழை பெய்துகொண்டிருக்கும் போதுதான் தண்ணீர் ஓடி வரும் என்பதால் கொஞ்ச நேரத்திலேயே கப்பல் மழையில் நனைந்து மூழ்கிவிடும். மறுபடி வேறு கப்பல்.

மொத்தமாக பத்துப்பதினைந்து செய்து கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக போர்க்கப்பல்கள் அணிவகுப்பு நடப்பதுண்டு. சில நேரங்களில் அவை பயணிகள் கப்பலாகவும் ( எறும்பு ), சில நேரங்களில் சரக்ககுகளை கொண்டுசெல்பவையாகவும் ( இலைகள், குச்சிகள் ) இருந்துள்ளன. நான்கு வீடு தள்ளி இருக்கும் நண்பனுக்கு கடிதப்போக்குவரத்து கூட உண்டு.

இப்படி சொல்லிக்கொள்ளவாவது நமது  பால்ய காலம் இருந்தது. இன்று எனது குழந்தைக்கு காகிதக்கப்பல் செய்யத்தெரியும். ஆனால் அது தண்ணீரில் ஓடும் என்று தெரியாது என்பது எப்படிப்பட்ட ஒரு கருப்பு நகைச்சுவை. இன்று பால்கனியின் கம்பிகளுக்கு பின்னே கைதிகளாய் நின்று சென்னை மழையைப்பார்க்கும் போது அன்று தொலைத்த சந்தோஷத்தின், துள்ளலின் வலி நெருடுகிறது.

பின்குறிப்பு : இன்று எப்படியும் என் மகள் யாழினியுடன் கப்பல் விட்டுவிடவேண்டும்.