கார்த்திகை தீபத்தினுடைய புராணக்கதை என்னவாக வேண்டுமாலும் இருந்துவிட்டுப்போகட்டும். கிராமத்து சிறுவர்களுக்கு அது இன்னொரு தீபாவளி. கொண்டாட்ட நாள். தீபாவளியைப்போலவே எப்போது வரும் என
நீண்டநாட்கள் நாங்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் ஒரு பண்டிகை.
வாங்க வேண்டிய பட்டாசுகளின் பட்டியலைத்தயாரிப்பதோடு தீபாவளியின் வேலை முடிந்துவிட்டது. எவ்வளவு கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பதெல்லாம் அப்பாக்களின் கையில்.
ஆனால் கார்த்திகை தீபம் அப்படி அல்ல. நாங்களே தொடைத்தட்டி களமிறங்கும் வேலை. கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்னதாகவே எங்களின் தோள்கள் தினவெடுக்கத்தொடங்கும். கார்த்திகைப்பொட்டலம் செய்வதற்கான முன்னெற்பாடுகளில் முனைப்புடன் களத்தில் குதிப்போம்.
முதல் வேலை கரி. அடுப்புக்கரி சேகரித்து காயவைக்கவேண்டும். கிராமமாக இருப்பதால் கரிக்கு பஞ்சம் இருப்பதில்லை. எல்லாருடைய வீடுகளிலும் விறகடுப்பு உண்டு. அப்போது கேஸ் அடுப்பெல்லாம் இல்லை. சிலரிடம் மண்ணெண்ணை ஸ்டவ் இருப்பதுண்டு. எங்கள் வீட்டிலும் ஸ்டவ் இருந்தது. பாதி சமையல் ஸ்டவ்விலும் மீதி விறகடுப்பிலும் நடக்கும்.அதனால் அடுப்புக்கரி எப்போதும் இருக்கும். அப்படியே கிடைக்கவில்லை என்றாலும் சில பல மரக்கட்டைகள் நெருப்பிற்கு பலியாவதுண்டு.கரியை நன்றாக வெயிலில் காயவேண்டும். நான்கு இருகையளவு கரியை எடுத்து சாக்கின் மேல் பரப்பி வீட்டிற்கு முன் கொரட்டில் காயவைப்போம். பள்ளி செல்லும் வேலை இருப்பதாலும், மழைக்காலமாதலாலும் வீட்டில் இருப்பவர்கள் தான்
அதற்கு காவல். பள்ளி முடிந்து வந்ததும் முதல் வேலை நன்றாக காய்ந்திருக்கிறதா என பார்ப்பதுதான்.
கார்த்திகைப்பொட்டலம் சுற்றும் போது வரும் தீப்பொறி வாலுடன் வரவேண்டுமானால் அதற்கு பனம்பூ கரி வேண்டும்.
கத்தி, கபடா, வாங்கு, கொம்பு என அனைத்து ரக போர் ஆய்தங்களுடன் தேடுதல் தொடங்கும். பெண் பனை மரங்களே காய்க்கும். ஆண் மரங்கள் காய்ப்பதில்லை. எங்களைப்போலவே தீவட்டி தடியன்கள்தான். ஆனால் பூக்கும். எங்களுக்குத்தேவை அந்தப்பூக்கள்தான். எத்தனையோ தந்திரங்கள் செய்து முற்றிக்காய்ந்த பூக்களைப்பறிப்போம். பூக்களைப்பற்றி சொல்வதால் பறிப்போம் என சொல்லுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தப்பூக்களை அப்படி
பறிக்கமுடியாது. பனைமரத்தின் உச்சியில் மெல்லிய, நீண்ட வாழைப்பழங்களைப்போல் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும். ஏணி வைத்து பாதி மரம் ஏறி, வாங்கால் வெட்டவேண்டும். சில வீரபராக்கிரமசாலிகள் கையில் கத்தியுடன் உச்சியில் ஏறி வெட்டுவதும் உண்டு. என்னுடைய வீரம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நமக்குத்தான் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் என்பதால் பத்தடி மரத்தில் ஏறும்போதே தொடைகள் தாளம் போட ஆரம்பித்துவிடும். உச்சிவரைலாம் ஏறுவதில்லை வாங்கால் வெட்டுவதோடு சரி. இல்லையென்றால் மேலேயிருந்து வெட்டிப்போடுவதை
கீழே பொறுக்கும் குழுவின் தளபதி நான்.
இந்தப்பனம்பூ வெட்டுவதில் குழுவாகவே செயல்படுவோம். பிறகு சமமாக பங்கிட்டுக்கொள்வோம். பூவைக் காயவைத்து நெருப்பிலிட்டு கரியாக்கி அதையும் காயவைக்கவேண்டும். இந்தக் கரித்துண்டுகள் ஏற்கனவே காய்ந்துகொண்டிருக்கும் விறகு கரித்துண்டுகளுடன் சேர்க்கப்படும்.
நல்ல ஒரு சுபயோக சுப தினத்தில், மங்களகரமாக நேரத்தில் விறகுக்கரியையும், பனம்பூக்கரியையும் கையில் கிடைக்கும் எல்லா ஆயுதங்களாலும் நன்றாக உடைத்து,இடித்து, தூளாக்கி பிறகு நன்றாக பொடியாக்குவோம். ஒரே ரணகளம்தான். அப்போது நான் நல்ல சிவப்பு என்பதால் ( சிரிக்கக்கூடாது , நான் நிஜமாலுமே அப்போது சிவப்புதான் )
கரியைகழுவுவதற்கே ஒரு மாமாங்கமாகும். நாங்கள் அனைவருமே கரிபால்டிகள்தான் அப்போது.நல்ல பருத்தி துணியாக எடுத்து, சதுரமாக வெட்டி எடுத்து அதில் நடுவில் இந்தக்கரிப்பொடியைப்பரப்பி மடித்து பிறகு
பாயைச்சுருட்டுவதுபோல் சுருட்டி பிரியாமல் இருக்க நூலால் கட்டி வைப்போம். இதுதான் கார்த்திகைப்பொட்டலம். விறகுக்கரி தனியாகவும், பனம்பூக்கரி தனியாகவும் பொட்டலங்களாக்கப்படும். தீபத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த வேலைகள் முடிந்துவிடும்.
ஆமணக்கு செடியில் மூன்றாகப்பிரியும் கிளைகளாகப்பார்த்து வெட்டி, அதன் நடுவில் இந்தப்பொட்டலத்தை வைத்து மேலே மூன்று கிளையையும் ஒன்றாக்கி இறுக்கிக்கட்டி அதன் நுனியில் நீண்ட கயிற்றைக்கட்டினால் வேலை முடிந்தது.
இனிமேல் ஒன்லி எக்ஸிக்யூஷன் தான். தீபத்தன்று கட்டிவைத்த கயிற்றை செங்குத்தாகப்பிடித்து உள்ளே இருக்கும் கரிப்பொட்டலத்தில் மேல் நெருப்புத்துண்டங்களை வைத்து லேசாக ஊஞ்சல் போல் இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் உள்ளே இருக்கும் கரிப்பொடிநெருப்பில் பட்டு, பற்றி தீப்பொறிகளாக, சிதறல்களாக தெறிக்கும்.பனம்பூ பொட்டலத்திலிருந்து வரும் பொறிகளுக்கு அழகாக சின்னச்சின்னதாய் வால்கள் முளைத்திருக்கும்.
நெருப்புபொறி வந்தவுடன் சுற்றவேண்டியதுதான்.
தலைக்கு மேலே வட்டமாக சுற்றுவதுதான் அடிப்படை. கற்றுகுட்டிகள் சுற்றுவது அது. இரு புறமும் மாற்றி மாற்றி இன்ஃபினிட்டி சிம்பல் போல் முன்பக்கமாக சுற்றுவதற்க்குப் பெயர் வண்டிச்சக்கரம். டிரைய்னியிலிருந்து ப்ரொபேஷனல் பீரியடில் இருப்பவர்கள் சுற்றுவது இது.ப்ரொஃபஷனல்கள் நாற்புறமும் சுற்றுவார்கள். முதலில் தலைக்குமேல் சுற்றி, இருபுறமும் வண்டிச்சக்கரம் சுற்றி பிறகு கையை வளைத்து முதுகிற்கு பின்னால் ஒரு வட்டம். மீண்டும் தலைக்குமேல் என தொடரும்.
எங்கேயாவது சிறிது பிசகினாலும் முதுகில் அடித்து சதையைத்தீய்த்து விடும். அபாயம் எதில்தான் இல்லை.
ஆனால் ஏனைய வெளிச்சங்களற்ற சுத்தமான இருட்டில் தன்னைச்சுற்றி ஒரு கோடி மின்மினிப்பூச்சிகளாய் தீப்பொறிகள் தெறிக்க, கார்த்திகை சுற்றும் போது வரும் கொண்டாட்டம் இருக்கிறதே....அடடா...!!!
இழப்பின் நினைவுகள் கூட மகிழ்ச்சிதான்...
நம் நகர வாழ்க்கை தின்று ஏப்பம் விட்டவை இன்னும் ஏராளம்.
திரும்ப கிடைக்காத பொற்காலம்...
ReplyDelete