Wednesday, 23 October 2013

பாம்பு





பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். நிஜம். 

என்னதான் விஷமில்லா பாம்பென்றாலும், மண்புழு அளவேதான் என்றாலும் வீட்டிற்குள் வந்துவிட்டால் உதறல்தான். பாம்பின் பயம் இல்லாதவர்களே இல்லை என சொல்லிவிடலாம். சிலபேர் பாம்புப்பண்ணையில் பல் 
பிடுங்கப்பட்ட பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அப்பா.....!!! என்ன ஒரு தைரியம் என நமக்கு தோன்றும். அவர்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை உற்றுப்பார்த்தால் 
தெரியும்,எதையோ சாதித்த வெற்றிக்களிப்பும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சிறிய பயமும்.

கிராமத்தில், சிறியவயதில்  பாம்புகளை பார்க்காத நாட்களே இல்லை எனலாம். எங்கள் ஊர் இரண்டு பகுதிகளாக இருக்கும். பழையூர், புதூர் என்று. நாங்கள் இருந்தது புதூரில். புதூர் வெறும் இரண்டே தெருக்களைக்கொண்டது. 
சுற்றிலும் வெறும் வயல்கள், தோட்டங்கள், தோப்புகள். ஊருக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு வாய்க்கால்கள். ஊருக்கு வெளியே வெள்ளாறு. அதனால் பாம்புகளுக்கு பஞ்சமில்லை.

நல்லபாம்பு, சாரப்பாம்பு, கட்டுவிரியன், தண்ணிப்பாம்பு, கொம்பேரிமூக்கன்,மன்ணுளிப்பாம்பு,பச்சைப்பாம்பு இன்னும் எத்தனையோ பேரில்லாத அல்லது பெயர் தெரியாத பாம்புகள். 

நல்லபாம்பு கடவுளைப்போல. கொல்லமாட்டார்கள். யாரையும் தொந்தரவு செய்யாதவரை. ஆனால் வீட்டிற்குள் வந்துவிட்டால் கடவுளுக்கு கூட 
அடிதான். வேறு வழியில்லை. நமது கதைகளிலும்,காவியங்களிலும் கூட பாம்பிற்கு ஒரு இடம் உண்டு. 

ஓலாலக்குட்டி என்று ஒரு பாம்பு. அதன் உண்மையான பெயர் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. அதனுடைய சுவாரசியமே எண்ணிக்கைதான். ஒரு பாம்பு வந்தது. அடித்துக்கொன்றோம் என இருக்காது. ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒருமணிநேர இடைவெளியில் ஒரு முறை ஏழு ஓலாலக்குட்டிகளை அடித்துப்பார்த்திருக்கிறேன். மொத்தமாகத்தான் வெளியே இரைதேட செல்லுமா என தெரியவில்லை. ஆனால் நிறைய வரும். யாராவது ஒரு பாம்பை அடித்துவிட்டால், இன்னும் சில பாம்புகளுக்காக காத்திருந்ததுண்டு.

 தவமாய் தவமிருந்து சினிமாவைப்போல அப்பாவுடன் பள்ளிக்கு மிதிவண்டியில்தான் செல்வேன். வாய்க்கால் ஓரமாகத்தான் செல்லவேண்டும். மூன்று கிலோமீட்டர்கள் தள்ளி உள்ள பள்ளிக்கு செல்லும்வரை வாய்க்காலில் எத்தனை தண்ணிப்பாம்புகள் நீந்துகின்றன என எண்ணிப்பார்ப்பது எனது தினசரி பொழுதுபோக்கு. மூன்று, நான்கிலிருந்து எட்டு அல்லது பத்து வரைகூட எண்ணியதுண்டு. இந்த வாய்க்காலில் தான் விடுமுறையில் தாவிக்குதித்து குளிப்போம்.

 பாம்புகள் குட்டி போடுவதும் உண்டு. முட்டை இடுவதும் உண்டு. ஒருமுறை நானும் எனது நண்பனும் ஏதொ ஒரு ஞாயிற்றுக்கிழமை கல்லெறிந்து கிடைத்த பக்கத்துவீட்டு நெல்லிக்காயை சுவைத்துக்கொண்டே வீட்டிற்குப்பின்னால் இருக்கும் கன்னிவாய்க்கால் பக்கமாக சென்றோம். கன்னிவாய்க்கால் என்பது பெரிய வாய்க்காலின் கிளை. அகலம் குறைவாக இருக்கும். ஒரு எட்டில் தாண்டிவிடலாம். அங்கே பனைமரத்தடியில் 
மண்ணை நோண்டியபோது கிடைத்த முட்டையை உடைத்துப்பார்த்தோம். உள்ளே கொழகொழவென்ற திரவத்தில் பிறக்காத குழந்தையாக குட்டிப்பாம்பு. அம்மா பாம்பு வந்துவிடும் என பயந்துகொண்டு எடுத்தோம் ஓட்டம். 

யாரையும் கடிக்காத நல்லபாம்பின் விஷம் நாளைடைவில் மாணிக்கமாகும். இரவில் இரை தேட செல்லும் போது வெளிச்சத்திற்காக அதை கக்கும். அப்போது அதன் மேலே சாணி உருண்டையை போட்டு மாணிக்கத்தை 
எடுக்கலாம் என ஒரு கதை உண்டு. இப்போது கூட வயதான கிராமவாசிகள் இக்கதையை உண்மை என நம்புவதுமுண்டு. 

பாம்பை பிடிக்க சுளுக்கு இருக்கும். ஒரு மூங்கில் கழியின் முனையில் இரும்பில் அம்பு மாதிரி சொருகியிருப்பார்கள். அதை வைத்து குத்திப்பிடிப்பதுண்டு. புற்றுகளில் இருக்கும் பாம்பை இருளர்கள்தான் 
பிடிப்பார்கள், அதன் தோலுக்காக.  எங்கள் ஊரிலேயே ஒரு இருளர் குடும்பம் இருந்தது. ரோவம்பா என்று ஒரு பாட்டி இருந்தது அந்த குடும்பத்தில். மிகவும் இலாவகமாக கையாலேயே பிடித்துவிடும். 

இப்போதெல்லாம் கிராமத்தில் கூட பாம்புகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அழிந்துபோன தோப்புகளாலும், வற்றிப்போன ஆறு,வாய்க்கால்களாலும், எலிகளுக்காக வயலைச்சுற்றி போடப்பட்ட மின்சாரக்கம்பிகளில் அடிபட்டும் உணவிழந்தும் சற்றேறக்குறைய அழிந்துவிட்டன.

வயல்கள்,  எலிகள், பாம்புகள், பருந்துகள் என்ற உயிர்சுழற்சியின் குரல் வளையை நாம் எப்போதோ நெறித்து விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, காத்திருக்கிறோம் வேறெதையோ அழிக்க.




No comments:

Post a Comment