அப்போதெல்லாம் மழை கொட்டித்தீர்க்கும். ஐப்பசி மாதம் வந்துவிட்டாலே மழைதான். உங்க வீட்டு மழை, எங்க வீட்டு மழை இல்லை. மழை ஆரம்பித்தால் சில நாட்களுக்கு நீடிக்கும். பெருமழையாகவும் இருக்காது. லேசாக தூறிக்கொண்டே இருக்கும், நாட்கணக்கில், வாரக்கணக்கில் கூட.
மழை என்றதுமே முதலில் ஞாபகம் வருவது எங்களின் காகிதக்கப்பல்கள்தான்.சாதாரணக்கப்பல், கத்திக்கப்பல்,மாடிக்கப்பல் இரட்டை ராஜா - ராணிக்கப்பல் என்று நிறைய வகை உண்டு. தரையில் நேராக நிற்கமுடியாத கத்திக்கப்பல் நீரில் சாயாமல் மிதப்பது ஓர் அதிசயம்.
அப்போது நான்காவது அல்லது ஐந்தாவது படித்துக்கொண்டிருந்திருப்பேன்.
எங்கள் வீடு தெருவின் நடுவில் இருக்கும். தெரு முழுக்க ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும்தான்.
தெருவில் மழைத்தண்ணீர் பிறந்து சிறிது நேரமே ஆன கன்றுக்குட்டி போல ஒரு துள்ளலுடன், மேற்கிலிருந்து கிழக்காக, சந்தோஷமாக சலசலத்து ஓடிவரும். அதே கன்றுக்குட்டியின் சந்தோஷத்துடனே நாங்களும் கப்பல் விட ஓடுவோம். ஒவ்வொரு வீட்டின் முன்னரும் எனது கூட்டாளிகள் கப்பலுடன் இருப்பார்கள். ஒரே நேரத்தில் கப்பல் விட்டு யாருடையது முன்னால் செல்கிறது என்ற போட்டிகளும், நடுவே சிறு கற்களை, மரக்குச்சிகளை வைத்து நீரோட்டத்தின் போக்கை மாற்றி கப்பலை திசைதிருப்புதலும் உண்டு. மழை பெய்துகொண்டிருக்கும் போதுதான் தண்ணீர் ஓடி வரும் என்பதால் கொஞ்ச நேரத்திலேயே கப்பல் மழையில் நனைந்து மூழ்கிவிடும். மறுபடி வேறு கப்பல்.
மொத்தமாக பத்துப்பதினைந்து செய்து கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக போர்க்கப்பல்கள் அணிவகுப்பு நடப்பதுண்டு. சில நேரங்களில் அவை பயணிகள் கப்பலாகவும் ( எறும்பு ), சில நேரங்களில் சரக்ககுகளை கொண்டுசெல்பவையாகவும் ( இலைகள், குச்சிகள் ) இருந்துள்ளன. நான்கு வீடு தள்ளி இருக்கும் நண்பனுக்கு கடிதப்போக்குவரத்து கூட உண்டு.
இப்படி சொல்லிக்கொள்ளவாவது நமது பால்ய காலம் இருந்தது. இன்று எனது குழந்தைக்கு காகிதக்கப்பல் செய்யத்தெரியும். ஆனால் அது தண்ணீரில் ஓடும் என்று தெரியாது என்பது எப்படிப்பட்ட ஒரு கருப்பு நகைச்சுவை. இன்று பால்கனியின் கம்பிகளுக்கு பின்னே கைதிகளாய் நின்று சென்னை மழையைப்பார்க்கும் போது அன்று தொலைத்த சந்தோஷத்தின், துள்ளலின் வலி நெருடுகிறது.
பின்குறிப்பு : இன்று எப்படியும் என் மகள் யாழினியுடன் கப்பல் விட்டுவிடவேண்டும்.

No comments:
Post a Comment