சுத்தமாக சூரியனை பார்க்க முடியாது. விடியல் காலை எப்படி இருக்குமோ அந்த அளவு வெளிச்சம் தான் பகல் முழுக்க இருக்கும்.விடாமல் மழை தூறிக்கொண்டே இருக்கும். வெளியில் சென்று விளையாடவும் முடியாது. கொஞ்சநேரம் கப்பல் விடுவொம். மழையில் நனையாதே என்று வழக்கம் போல அம்மா, ஆயா, அப்பா யாரிடமிருந்தாவது திட்டுக்கள் கிடைக்கும். வேறு வழி இல்லை. வீட்டுக்குள் செல்லத்தான் வேண்டும்.
எங்கள் வீடு சிமெண்ட் தரை போட்ட ஓட்டு வீடு. மண்தரை போட்டு இருக்கும் கூரை வேய்ந்த வீடுகள் தான் மழைக்காலங்களுக்கு உகந்தவை. அதிக வெப்பமோ அதிக குளிரோ உள்ளே வராது. மழைகாலங்களில் சிமெண்ட் தரை வேர்க்கும். கழுவிவிட்டு அங்கங்கே காய்ந்தது போல் ஈரமாக இருக்கும். அந்த ஈரத்தில் நடந்துகொண்டே இருந்தால் சளி பிடித்துக்கொள்ளும், வழுக்கி விழநேரிடும் என நடப்பதற்காக மரப்பலகைகளும், சாக்குகளும் போட்டு வைத்திருப்பார்கள். அதன் மேல் நடக்கவில்லையெனில் மறுபடி திட்டு.
லேசான தூறலென்றால் வெளியில் விளையாடலாம். மழை கொட்ட ஆரம்பித்துவிட்டால் வீட்டிலிருப்பதைத்தவிற வேறு வழியில்லை. திண்ணையின் மரச்சட்டங்களின் வழியாக மழையை வேடிக்கை பார்ப்பது ஒரு குதூகலம். அப்போது ஒரு சிலரிடம் தான் குடை இருக்கும். மற்றவர்கள் சாக்குகளை உட்புறமாக முக்கோணமாய் மடித்தோ அல்லது சம்பங்கூடுகளிலோ வெளியில் செல்வார்கள். சம்பு என்பது குச்சி குச்சியாக இருக்கும். அதை மூன்று அல்லது நான்கு அடிகளில் சீராக நறுக்கி சணலோ, கயிறோ வைத்து பின்னி உடம்பை மறைக்கும் வடிவத்தில் செய்திருப்பார்கள். அதை தலையில் கவிழ்த்துக்கொண்டால் முழங்கால் வரை நனையாது. அப்போதே Eco Friendly. இயற்கையை மதித்தது மட்டுமல்ல, கடவுளாக்கி வழிபட்டோம்.
மழைக்காலங்களில் தான் வீட்டுக்குள்ளே விளையாடும் விளையாட்டுக்கள் பிரபலம். ஹை ஸ்கூல் போகும் போதுதான் செஸ், கேரம் எல்லாம் வந்தது எங்கள் வீட்டிற்கு. அதற்கு முன் ஒரிஜினல் அக்மார்க் கிராமத்து விளையாட்டுகள் தான்.பல்லாங்குழி, தாயக்கட்டை, ஆடு புலி ஆட்டம், ஒத்தையா ரெட்டையா? ஏழாங்காய், கூட்டாஞ்சோறு இப்படி. அந்த விளையாட்டுளைப்பற்றியே தனியே எழுதலாம் பிறிதொரு சந்தர்ப்பத்தில்.
ஈச்சம்பாய் ஒன்று இருக்கும் எங்கள் வீட்டில். ஈச்சமர சோலைகளில் சிறிது சிறிதாக பின்னி, பின் அனைத்தையும் ஒன்றாக இணைத்து பாய்வடிவில் செய்திருப்பார்கள். இப்போதைய பிளாஸ்டிக், கோரைப்பாய்களுக்கெல்லாம் முன்னோடி. நெல்லோ, வேறு தானியங்களோ வெயிலில் காய வைப்பதற்காக வைத்திருப்பார்கள். வீட்டின் கூடத்தில் பாதி அளவிற்கு இருக்கும். அதை விரித்து அதன் மேல் கோரைப்பாயைபோட்டு உட்கார்ந்து கொள்வோம். சூடாக முறுக்கு, காராபூந்தி என்று ஏதாவது செய்து தருவார்கள்.இடி சத்தத்திற்கு பயந்துகொண்டு அர்ச்சுனா அர்ச்சுனா என சொல்லிக்கொண்டு மூலையில் ஒட்டிக்கொள்வோம்.
அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தாராம். அந்தத்தவத்தின் ஆக்ரோஷத்தினால் சிவனால் ஒரு இடத்திலும் அமைதியாக இருக்க முடியவில்லை. தவத்தை கலைக்க என்னென்னவோ செய்கிறார் சிவன். மழையை அனுப்புகிறார், முடியவில்லை. செல்லை அனுப்பி தரையை அரிக்கச்செய்கிறார், முடியவில்லை. இடி பகவானை அனுப்புகிறார். அர்ச்சுனன் இடிபகவானை பிடித்து அக்குளில் வைத்து அழுத்திப்பிடித்துக்கொள்கிறார். அவருக்கு முழி பிதுங்கி என்னை விட்டுவிடு, நான் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன் என கதறுகிறார். உடனே அர்ச்சுனன் என்னை மட்டுமல்ல, என் பேரை சொல்பவர்களை கூட நீ நெருங்ககூடாதென்கிறார். நிபந்தனையை ஒத்துக்கொண்டு விடிதலையாகிறார் இடிபகவான்.
மழையின் குளிருக்கு, ஆயாவிடம் கதைகளை கேட்டுக்கொண்டு சுடச்சுட முறுக்கு சாப்பிட்ட நாட்கள் அவை.

Awesome pari...Brought back the school day memories spent at my grandma's house. keep writing....
ReplyDelete