(எங்கள் ஊர் )
என்னதான் தினமும் விளையாண்டாலும் கரிநாள் என்னும் காணும் பொங்கலின் விளையாட்டுக்களை எதிர்பார்த்தே இருப்போம். மற்ற பண்டிகைகளைப்போலவே காணும் பொங்கலன்று என்ன என்ன விளையாட்டுக்கள் விளையாடவேண்டுமென சில நாட்கள் முன்னதாகவே எங்களின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும். ஏகப்பட்ட திட்டமிடுதல்களும், நேர ஒதுக்கீடுகளும் முன்னதாகவே செய்யாவிட்டால் நிறைவேற்றுவது கடினம். எல்லாவற்றையும் ஒரு நாளில் விளையாடி விட முடியாதல்லவா? நல்லவேளை அப்போதெல்லாம் கிரிக்கெட்டோ, வாலிபாலோ எங்கள் ஊரில் பிரபலம் இல்லை.கோலி, பம்பரம், கில்லி, ஒண்டி, கல்லா மண்ணா?, உப்பு வாரி, தோண்டிய உடைச்சான், பே பந்து, கபடி, பட்டம், சணல் பந்து, என
வயது வாரியாக வித விதமான விளையாட்டுக்கள் உண்டு. கோலியை எடுத்துக்கொண்டால் குழி,பேந்தா,லாக்கு என பல வகைகள் உண்டு. பெண்களுக்கென்று பல்லாங்குழி, தாயக்கட்டை,கோலாட்டம்,கும்மி உண்டு. பெரியவர்கள் காலையில் சணல் பந்திலும் மதியம் சீட்டாட்டத்திலும்
மாலை எங்கள் சிறிசுகளுடன் ஆற்று மணலிலும் விளையாடுவார்கள்.
முதல் நாளே அதாவது மாட்டுப்பொங்கலன்று வீட்டில் சொல்லி விடுவோம். நாளை எங்களை எதற்கும் கூப்பிடக்கூடாது, எந்த வேலையும் சொல்லக்கூடாது என. இதில் சாப்பாடும் அடக்கம். நாங்களாக வந்தாலொழிய சாப்பிடக்கூட கூப்பிடக்கூடாது. காலை ஐந்தேமுக்கால் அல்லது ஆறு மணிக்கு தொடங்கும் விளையாட்டு மாலை ஏழு மணி வரை தொடரும், சில நேரம் உணவு கூட இல்லாமல்.
முதலில் ஆரம்பிப்பது கோலிக்குண்டுதான். பசங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு கோலி விளையாட்டின் வகைகள் முடிவு செய்யப்படும். பேந்தா விளையாடி முட்டித்தள்ள வைப்பதுதான் இறுதிகட்ட சுவாரசியம்.
காலை உணவிற்குப்பின் சணல் பந்து. இந்த சணல் பந்து எங்கள் ஊரின் சம்பிரதாய பாரம்பரிய விளையாட்டு. வயது வித்யாசம் பாராமல் அனைவரும் விளையாடுவோம். இந்நாளைய கிரிக்கெட்டின் முன்னோடி. சிறு சிறு
கருங்கல் ஜல்லிகளை நடுவில் வைத்து அதன் மேல் சணலால் சுற்றி சுற்றி கிட்டத்தட்ட ஒரு பெரிய தேங்காயின் அளவிற்கு கொண்டுவந்தால் பந்து ரெடி. அரைகிலோ அல்லது முக்கால் கிலோ இருக்கும் ஒரு பந்து. இரண்டு டீமாகப் பிரிந்துகொள்ளவேண்டும். மூன்றுமூன்று செங்கற்களை இருபுறமும் வைத்து
இடையில் ஒரு 4 அடி அளவுள்ள ஒரு கழியை படுக்கை வாட்டமாக வைக்கவேண்டும். பந்து எறிபவர் ஒரு பக்கம், கழிக்கு எதிரில் கழி கீப்பர் (விக்கெட் கீப்பர் போல) பக்கத்திற்கு ஒன்றாக இருவர், எதிர் முனையில்
பந்து எறிபவரின் எதிரி என ஒரு நேரத்தில் மூவர் களத்திலிருப்பர். ஒரு பக்கமாக முப்பது, நாற்பது அடி தூரத்திலிருந்து பந்தை வீசி எறியவேண்டும். அவரவர் பலத்திற்கு தகுந்த படி பந்து பாய்ந்தும், உருண்டும் வரும். பந்து நடுவில் வைக்கப்பட்டுள்ள கழியை கீழே தள்ளி விடவேண்டும். அப்படி விழுந்து விட்டால் (Clean Bold ) பந்து எறிபவரின் எதிரி இந்தப்பக்கத்தில் அவுட். அப்படி கழி விழாமல் அதைத்தாண்டி துள்ளும் பந்தைப்பிடித்து இப்பக்கம் இருப்பவர் கழியை திருப்பி அடித்துவிட்டால் (Stumping ) பந்து எறிந்தவர் அவுட்.
எந்நேரத்திலும் கழியை கீழே விழ விடாமல் பிடித்து விட்டால் பந்து மற்றொரு பக்கத்திலிருந்து வீசப்படும்.ஏதோ ஒரு பக்கத்தில் உள்ளவர்கள் முழுவதுமாக முதலில் அவுட் ஆகிறார்களோ அவர்கள் தோத்தாங்குளி.ஒரு வருடம் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் என இரு புறமுமாக பிரிந்து ஆடி இருக்கிறோம். யாராவது தோற்று வெளியேறினால் கிராமத்திற்கே உரித்தான கிண்டல் கேலிகள் தூள் பறக்கும்.
கருங்கல் கற்களை வைத்து கட்டிய பந்து என்பதால் ஏடாகூடமாக பிடித்தால் விரலில் ரத்தம் வருவது உறுதி.
சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு....?
அடுத்தடுத்து ஒவ்வொரு விளையாட்டாக முடித்துக்கொண்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் வெள்ளாற்றிற்கு சென்றுவிடுவோம். உப்புவாரி, பே பந்து என ரகளை கட்டும். ரப்பர் பந்தால் அடித்து முதுகு பங்சர் ஆகி விடும். இரவு நெருங்கியதும் அப்படியே கொத்து கொத்தாக ஆற்றில் குதித்து கும்மாளமடித்து குளித்து விட்டு கும்பலாக (அப்பா.. எத்தனை ’கு’..! ) ஊரில் எல்லையில் இருந்து ஒவ்வொரு வீடாக எல்லாருடைய வீட்டிற்கும் செல்வோம். ஒவ்வொரு வீட்டிலும் சூடம் கொளுத்தி திருநீறு இடுவார்கள்.
இறுதியில் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு, தெருவின் நடுப்பகுதிக்கு வருவோம். நடுவிலிருந்து எதிர் எதிராக செல்ல வேண்டியவர்கள் இருபுறமும் பிரிந்து நின்று அனைவருக்கும் கும்பிட்டு வணக்கம் சொல்லி அவரவர் வீடு செல்வோம்.
இதற்கு நடுவில் ஊர்ப்பெண்கள் சீவி முடித்து சிங்காரித்து கோயிலின் முன் கும்மி, கோலாட்டம் என பட்டையை கிளப்புவார்கள்.காணும் பொங்கல் அதிகாலை தொடங்கி இரவு வரை நீளும். விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகளும் தரப்படும்.
இன்றைய காணும் பொங்கலை எனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு ஒரு கட்டுரையில் முடித்துவிட்டேன்.