Monday, 4 August 2014

ஆடிப்பெருக்கு...

பதினெட்டாம் பெருக்கு என்று எங்கள் ஊரில் சொல்வோம்.

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் பெருகி வரும் ( இப்போது அருகி வரும் ) ஆற்று வெள்ளத்தினை வரவேற்கும் பண்டிகை.

வழக்கம்போல இந்தப்பண்டிகைக்கும் எந்த குறைச்சலுமில்லை.

சிறுவயதில்....

அய்யோ... ஆரம்பிச்சுட்டாண்டா...என புலம்பாதீர்கள். என்ன செய்வது? புண்பட்ட மனதை ப்ளாக் எழுதியும் ஆற்றலாம்.

காட்சி -1
------------

ஆடிப்பெருக்கிற்கு  ஒரு வாரகாலம் முன்பாகவே என்ன என்ன தின்பண்டங்கள் செய்யவேண்டும் என விண்ணப்பம் தருவோம். அரிசி வெல்லம், அவல் வெல்லம், பொட்டுக்கடலை உருண்டை, நிலக்கடலை உருண்டை, பொரி வெல்லம் என இந்தப்பண்டிகைக்கென்று தனி பட்டியல் உண்டு. இதில் நிச்சயம் மூன்றாவது தேறும் ஒவ்வொரு வருடமும்.

ஊர் பெருசுகள் சிலபேர் கலந்து பேசி எத்தனை மணிக்கு ஆற்றுக்கு செல்லலாம் என முடிவெடுத்து அனைவரிடமும் சொல்வார்கள். ஆயிப்பேட்டைதான் ஊர் பெயர். அதிலும் பழைய ஆயிப்பேட்டை, புது ஆயிப்பேட்டை என இரு பகுதிகள் உண்டு. நாங்கள் இருப்பது புதுஆயிப்பேட்டை.  இரண்டு தெருக்கள். மொத்தம் ஒரு இருபது குடும்பங்களே தேறும். எல்லாருமே  பங்காளிகளும், மாமன் மச்சான்களுமே..

சாயங்காலமாக ஒரு நான்கு மணி அளவில் அனைவரும் தின்பண்டங்கள், படையல் பொருட்களுடன் வெள்ளாற்றுக்குச்செல்வோம்.

இந்தப்பண்டிகைக்கென்று ப்ரத்தியேகமான சில படையல் பொருள் உண்டு. அதில் முக்கியமானது காதோலை கருகமணி. பனை ஓலையை சிறு குழல் போல செய்து, வண்ணம் தீட்டி அதை ஒரு கருப்பு சிறிய வளையலில் சொருகி வைத்திருப்பார்கள்.பிறகு மஞ்சள் பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய், எலுமிச்சை பழம் என வேறு சில சங்கதிகளும் உண்டு.

இந்தப்படையல் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டு மக்கள் வருவதற்கு முன்பாக எங்களைப்போல இளவட்டங்கள் சிலபேர் முன்பே ஆற்றுக்கு சென்றுவிடுவோம்.

ஆற்றில் தண்ணீருக்கு அருகில் இருக்கும் ஈர மணலில் மணலை குவித்து கிட்டத்தட்ட பிரமிடு போல ஒரு கோவில் கட்டுவோம். அதற்கு எதிராக சிறிது தூரத்தில் இன்னொரு சிறிய கோவிலும் உண்டு.கோவிலுக்கு படிகளும், சுற்றி சுற்றி உருண்டைப்பிள்ளையார்களும் உண்டு.

எல்லோரும் வந்தவுடன்  ஒரு கோவில்களுக்கும் இடையில் இரு புறமுமாக கொண்டு வந்த படையல் பொருட்களை வைப்போம். எல்லோருடைய தட்டிலிருக்கும் காதோலை கருகமணி, எலுமிச்சை, மஞ்சள், குங்கும பொடிகளை எடுத்து  ஒவ்வொரு பிள்ளையார் தலையிலும் ஒரு கருகமணி, அதன்மேல் ஒரு எலுமிச்சை வைத்து பொடிகளை கொட்டி அலங்காரம் செய்வோம்.

பிறகு வழக்கம்போல் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சடங்குகளை முடித்தவுடன், இறுதியாக அனைவரும் மணல் பிள்ளையார்களையும், கோவிலையும் இரு கைகளில் அள்ளிச்சென்று ஆற்றில் கரைப்போம். கரைத்துவிட்டவுடன் படையல் முடிந்தது. பிறகு ஆற்றில் கும்மாளம் போட்டுவிட்டு குளித்துக்கரையேறுவோம்.



இதே இடம்தான் நாங்கள் கோவில் கட்டி கொண்டாடிய இடம்.  


காட்சி -2
------------

நேற்று  காலை எதேச்சையாகத்தான் தெரிந்தது ஆடிப்பெருக்கு என்று. தெரிந்து விட்டதால் வடை பாயசம் சாப்பிட்டு விட்டு வேலையை முடித்துவிட்டோம்.




Saturday, 22 March 2014

சிக்கு புக்கு...சிக்கு புக்கு...


என்னுடைய முதல் ரயில் பயணம் எத்தனை வயதில் என்று சரியாய் ஞாபகமில்லை.

ஐந்து, ஆறு வயதிருக்கலாம். மூன்று, நான்காகக்கூட இருக்கலாம். குடும்ப சுற்றுலாவாக இராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாக்குமரி சென்றிருந்தோம். ரயில் பெட்டி  செங்கல் நிறத்தில் இங்கும் அங்கும் தாலாட்டியபடி சென்றுகொண்டிருந்தது. இரயிலில் ஒருநாள் எனக்கு காய்ச்சல் என்று கூட ஞாபகம்.

அந்த வயதிலேயே இரயில் என்னை முழுதாக ஆக்கிரமித்தது. எல்லாரையும் போலவா?, இல்லை எனக்கு மட்டுமா தெரியவில்லை அந்த பிரமிப்பு. ஒரு ராட்சசன் போல்  ”பாங்க்க்க்க்க்க்” என கத்திக்கொண்டு ஒவ்வொரு முறை கடந்து செல்லும்போதும் நான் துள்ளிக்குதித்திருக்கிறேன்.


மலையும் மலை சார்ந்த பகுதி, காடும் காடுசார்ந்த பகுதியும் போல எனது சிறுவயது ஆச்சரியங்கள் இரயிலும் இரயில் சார்ந்த பகுதியும் என ஆயிற்று. தண்டவாளங்கள், இரயில் நிலையம், நடைமேடை, இரும்பு சக்கரங்களில் ’கடக்’ ’கடக்’ என இழுத்துச்செல்லப்பட்டு பொருட்களை எடுத்துச்செல்லும் வண்டிகள், புத்தகக்கடை, டீக்கடை, சிவப்பு, பச்சை கொடிகள், விளக்குகள், நிலையத்தில் நிற்காமல் செல்லும் போது கூட எஞ்சினிலிருந்து கைமாறும் வளையங்கள், விசில் சத்தம் மற்றும் ரயிலின் வருகையை ஒட்டி நிலையத்தில் அடிக்கப்படும் தண்டவாள மணிச்சத்தம், வெள்ளை உடை அணிந்து கொடி அசைத்து செல்லும் கடைசிப்பெட்டி என என் சுவாரசியங்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை.

தண்டவாளத்தில் இடையில் காந்தம் கிடைக்கும் என யாரோ சொல்லியதை நம்பி அதை கடக்கும் போதெல்லாம் தேடிப்பார்த்திருக்கிறேன். தண்டவாளத்தில் காதை வைத்து தூரத்தில் இரயில் வரும் சத்தம் கேட்கிறதா என பார்த்திருக்கிறேன்.

இரண்டு நிமிடங்கள் தான் நிற்கும் என்பதால் தூரத்தில் இரயில் வரும்போதே பரபரப்பாகி,  வந்தவுடன் அடித்துப்பிடித்து ஏறி அமருவது படபடப்புடன் கூடிய மகிழ்ச்சியான தருணங்கள்.

டக் டக் என சத்தமிழைத்து ஓடும் மின்விசிறி, வேகமாக பின்னோக்கி ஓடும் மரங்கள், வழியெங்கும் டாட்டா காண்பிக்கும் சிறுவர்கள், பாலத்தில் செல்லும்போது சுருதி மாறி ஒலிக்கும் சத்தம் என சொல்லிக்கொண்டே போகலாம்.இரயிலின் ஓட்டுனர் என்னைப்பொருத்தவரை ஒரு சூப்பர்மேன். ஒற்றைஆளின் உள்ளங்கைக்கு பணிந்து ஊரையே இழுத்துச்செல்லும் இரும்பு ராட்சசன். ஒரு பிரமாண்டமான இயந்திரம் இப்படித்தான் இருக்கும் என்பதன் முதல் சாட்சியாக இரயில் இஞ்சின் இருந்தது. பின்னாளில் வந்த டீசல் இஞ்சின்கள் முந்தைய நீராவி எஞ்சின் அளவுக்கு கவரவில்லை எனினும் மோசமில்லை. இப்போதுள்ள மின்சார இரயில்களை பார்க்கும்போது அப்போதைய சந்தோஷங்கள் வருவதேயில்லை.

அடிக்கடி கனவிலும், நிஜத்திலும் எனக்கு வரும் எண்ணங்கள் ஒரு அடர்ந்த காட்டினுள், வளைந்து வளைந்து, குளிர்ந்த காற்று முகத்தில் அடிக்குமளவு தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லும் ஒரு பயணம்.

சென்று சேருமிடம்  பற்றி கவலை இல்லாமல் பயணமே சந்தோஷமாய் இருப்பது இரயிலில்தான். Unreserved பெட்டியின் மர இருக்கைகள் இந்த சந்தோஷத்திற்கு தடையாய் ஒருபோதும் இருந்ததில்லை.

எனக்கு ஒரு விபரீத ஆசை இருந்தது. இன்னமும் இருக்கிறது. இரண்டு பெட்டிக்கு நடுவில், எஞ்சினின் முன்னால் காற்று முகத்திலறைய நின்று கொண்டு, மற்றும் கடைசியில் தனி ஆளாக Guard இருக்கும் பெட்டி, இவற்றில் பயணம் செய்யவேண்டும் என. இதில் முதலாவது மட்டும் தான் சாத்தியமாயிற்று. ஒருமுறை டெல்லியிலிருந்து சென்னை வரும்போது நான் இருந்த பெட்டிக்கு அருகில் இருந்தது ஏ சி பெட்டி. ஏசி என்பதால் அந்தப்பெட்டிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் அன்று அந்த கதவு சரியாக அடைக்கப்படவில்லை. லேசாக தள்ளிப்பார்த்ததும் சற்று விலகிக்கொண்டது. என் தலையில் காதலா காதலா போல ஐடியா கொம்பு முளைத்தது. என்கூட வேறு யாரும் வரவில்லை என்பதால் அந்தக்கொம்பு நன்றாக நீண்டு வளர்ந்தது. ஆனது ஆகட்டும் என கொஞ்சம் கொஞ்சமாக அடிமேல் அடிவைத்துஇரண்டு பெட்டிகளையும் இணைக்கும் அந்த பெரிய
கொக்கியின் மேல் நின்றேன். குனிந்து பார்த்தால் கீழே தண்டவாளமும், சரளைக்கற்களும் பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒரு பத்து நொடிகள் இருக்கும். "சாதித்து விட்டாயடா பாரி" என்று காலரை இழுத்துவிட்டுக்கொண்டு உள்ளே வந்துவிட்டேன். இப்போது
நினைத்துப்பார்க்கும் போது உதறலாய்த்தான் இருக்கிறது. இன்னும் இரண்டு மிச்சம் இருக்கிறது....பார்க்கலாம்.

முதன் முதலில் சென்னைக்கு, தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். மாமா வீட்டிலிருந்து கிண்டி வந்து பின், கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு மின்சார இரயிலில் பயணம். நாங்கல் ஒரு மூன்று பேர் ஒன்றாக வருவோம்.  எங்கே ஏறினாலும் பெட்டியின் அடுத்த வாசலில் கீழே அமர்ந்துவிடுவோம். அந்தப்பக்கம் எந்த ஸ்டேஷனும் வராது. கையில் கடலை வாங்கி கொறித்துக்கொண்டே மறுபுறத்தில் காலை தொங்க விட்டுக்கொள்வோம். விரைந்துசெல்லும் இரயிலில் காலை தொங்கவிட்டுக்கொண்டு வருவதற்கு ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனமும், ஒரு குருட்டுத்தனமான புத்திசாலித்தனமும் அப்போதே இருந்தது. பழவந்தாங்கலுக்கு அருகில் ஓரிடத்தில் மட்டும் இடிக்குமென்பதால் ஜாக்கிரதையாக அங்கே காலை தூக்கிக்கொள்வோம்.

இப்போது கூட இரயின் சந்தோஷங்களும், சுவாரசியங்களும் எனக்கு அலுத்ததேயில்லை. Strangers on a Train, Unstoppable, The taking of Pelham, Under siege-2, என இரயிலைப்பற்றிய படம் என்றால்கூட எனக்குக்கொண்டாட்டம் தான்.

அதனால் மக்களே, அடுத்தமுறை எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது கூடவே ஒரு இரயிலையும் பரிசாக கொடுத்துவிடுங்கள். இல்லையேல் இந்தக்கட்டுரைக்கு இரண்டாம் பாகம் எழுதிவிடுவேன் என எச்சரிக்கிறேன்.

Friday, 14 February 2014

அஞ்சலி

நான் முதன் முதலில் அவரை பார்க்கச்சென்ற போது, அவரது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அப்போதுதான் சாப்பிட்டு முடிந்திருந்தார்.

”வாங்க.. உக்காருங்க..” என்றார், மிக மெதுவான தொனியில்.


தயங்கித்தயங்கி அவரது முன்பாக அமர்ந்தேன். சுற்றிலும் புத்தகங்கள் இருந்தன. ஒரு பக்கத்தில் ஒரு அலமாரி முழுக்க திரைப்பட டிவிடிக்கள். தட்டும், டம்ளரும் மேஜையின் ஓரத்தில் இருந்தது. ஒரு சின்ன சத்தம் கூட இல்லை.

”ஒரு நிமிடம்”  எனச்சொல்லிவிட்டு தட்டை வைத்துவிட்டு வர எழுந்தார். 

“குடுங்க சார். நான் வச்சுடறேன் “ என்றேன். 

“இல்லை. பரவாயில்லை” என்று சொல்லி அவரே மெதுவாக தள்ளாடி எழுந்து சென்று வைத்துவிட்டு வந்தார்.எத்தனைதான் வயதாகி விட்டாலும் சிங்கம், பூனையாகி விடுவதில்லை.

நான் ஓவியத்தை முழுநேரத்தொழிலாக எடுத்துகொள்ளலாம் என நினைத்தபோது, எனக்குப்பிடித்த, என்னை பாதித்த ஆளுமைகளை வ்ரைந்து, அவர்களை நேரில் சந்தித்து கொடுக்கவேண்டும் முடிவெடுத்தேன்.அப்போது முதலில் தோன்றியது, இளையராஜா, பாலுமகேந்திரா, இயக்குனர் மகேந்திரன். இவர்களையெல்லாம் சந்திக்க முடியுமா என யோசிக்கவேயில்லை. பாலுமகேந்திராவின் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் உண்டு.  அந்தப்படத்தை எடுத்து வரையத்தொடங்கினேன்.அவரின் எந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலும் அது ஒரு புகைப்படம் என்பதைத்தாண்டி இயல்பாகவே அவரின் ஆளுமையையும், உணர்ச்சிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி இருக்கவேண்டும் 
என நினைத்து எதுவும் எடுக்கப்பட்டதல்ல. அவருக்கே தெரியாமல் இயல்பாக 
எடுக்கப்பட்டவைதான். அதனால்தான் அத்தனை அருமையாய் இருக்கும்.  
சினிமா உலகத்தில் இருக்கும் என்னுடைய ஒரு நண்பருக்கு பாலுவின் 
மேனேஜரைத்தெரியும். அவரின் மூலமாக சந்திக்க நேரம் வாங்கிக்கொண்டு அவரது ’சினிமா பட்டறை’ அலுவலகத்திற்கு சென்றேன்.

”சொல்லுங்க” என்றார்.

என்னை பாதித்த, நான் மதிக்கும் ஆளுமைகளை சந்தித்து அவர்களுடைய பங்களிப்பிற்காக என்னுடைய நன்றியை தெரிவிப்பதற்காகவே வந்ததாக சொன்னேன். நான் வரைந்த ஓவியத்தை தந்தேன். 

”ரொம்ப நல்லாயிருக்கு” என்றார். 

அவருடைய அந்த அலுவலகமும், சினிமா பட்டறையுமாகிய அந்த இடம் அவருடைய  ’வீடு’ படத்திற்காக கட்டப்பட்டதாக சொன்னார். அவருடைய வீடு, சந்தியாராகம் படங்களின் ஒரிஜினல் நெகடிவ்கள் இப்போது இல்லை என வருத்தப்பட்டார். மேலும் சிறிது நேரம் பேசிய பிறகு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என எனது சிறிய Pont and Shoot கேமராவை  எடுத்தேன். அவரது உதவியாளரை கூப்பிட்டு SLR Camera வை கொண்டுவரச்சொன்னார். 

எனது சில்லியான, குழந்தைத்தனமான, புத்திசாலித்தனமான ஆசையை அவரிடம் சொன்னேன். என்னை ஒரு புகைப்படம் எடுத்துத்தரச்சொல்லி. 

தந்தார். 


எத்தனையோ விருதுகளைப்பெற்ற அந்தக்கை, என்னையும் புகைப்படம் எடுத்தது. 

அந்தக்கணத்தை வார்த்தைகளில் சொல்வது கடினம்.

’அடிபெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ இந்தப்பாடல் தரும் குதூகலம் அந்த பெண்ணைப்போலவே நமக்கும் தொற்றிக்கொள்ளும். ஷோபாவை இத்தனை அழகாய் யாரும் காட்டியதில்லை. வேண்டுமானால் இன்னொரு முறை you tubeல் பாருங்கள்.




மூன்றாம் பிறை வந்தபோது எனக்கு எட்டு வயது. எங்கே பார்த்தேன் என நினைவில்லை. அப்போது படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது வில்லன் நடராஜ் வரும் காட்சிகள் இனம் புரியா ஒரு திகிலை ஏற்படுத்தியது. படம் முடிந்து வெளியே வந்ததிலிருந்து, கிளைமேக்ஸ் காட்சி ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தும், சோகத்திலிருந்தும் இன்றுவரை என்னால் வெளியே 
வரமுடிந்ததில்லை. கமலுக்கு கிடைத்த முதல் தேசிய விருது. 
எனக்கு இன்றும் கமல் மீது கோபம் உண்டு. கமலால் ஒரு கோடி பணத்தைக்கூடவா இவருக்காக செலவு செய்ய முடியாது. ஒரு கோடி வேண்டாம். ஐம்பது லட்சம்?   ஐம்பது லட்சத்தில் கூட பாலுவால் படம் எடுத்திருக்க முடியும். படம் ஒரு பைசா கூட லாபம் தராமல்தான் போகட்டுமே.

கமல் பாலுமகேந்திராவை வைத்தும் ரஜினி மகேந்திரனை வைத்தும் படங்களை தயாரித்திருக்கவேண்டும். இது நன்றியோ,உதவியோ இல்லை. அவர்களது கடமை. அந்த விஷயத்தில் சசிகுமார் புண்ணியம் கட்டிக்கொண்டார்.

பாலுமகேந்திரா என்ற ஆலமரத்தில் வந்தமர்ந்து இளைப்பாறி சென்ற பறவைகள் ஏராளம். 

அவரின் சீடர்கள் விதைகளாய், விழுதுகளாய், வேர்களாய், வெளிச்சங்களாய் எப்போதும் இருப்பார்கள். 

உயிரோடு இருப்பதுவா வாழ்க்கை? அல்லது உயிர்மட்டும் போவதுதான் இறப்பா?








Thursday, 16 January 2014

காணும் பொங்கல்


 (எங்கள் ஊர் )
 

     என்னதான் தினமும் விளையாண்டாலும் கரிநாள் என்னும் காணும் பொங்கலின் விளையாட்டுக்களை எதிர்பார்த்தே இருப்போம். மற்ற பண்டிகைகளைப்போலவே காணும் பொங்கலன்று என்ன என்ன விளையாட்டுக்கள் விளையாடவேண்டுமென சில நாட்கள் முன்னதாகவே எங்களின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும். ஏகப்பட்ட திட்டமிடுதல்களும், நேர ஒதுக்கீடுகளும் முன்னதாகவே செய்யாவிட்டால் நிறைவேற்றுவது கடினம்.  எல்லாவற்றையும் ஒரு நாளில் விளையாடி விட முடியாதல்லவா? நல்லவேளை அப்போதெல்லாம் கிரிக்கெட்டோ, வாலிபாலோ எங்கள் ஊரில் பிரபலம் இல்லை.கோலி, பம்பரம், கில்லி, ஒண்டி, கல்லா மண்ணா?, உப்பு வாரி, தோண்டிய உடைச்சான், பே பந்து, கபடி, பட்டம், சணல் பந்து,  என
வயது வாரியாக வித விதமான விளையாட்டுக்கள் உண்டு. கோலியை எடுத்துக்கொண்டால் குழி,பேந்தா,லாக்கு என பல வகைகள் உண்டு. பெண்களுக்கென்று பல்லாங்குழி, தாயக்கட்டை,கோலாட்டம்,கும்மி உண்டு. பெரியவர்கள் காலையில் சணல் பந்திலும் மதியம் சீட்டாட்டத்திலும்
மாலை எங்கள் சிறிசுகளுடன் ஆற்று மணலிலும் விளையாடுவார்கள்.

முதல் நாளே அதாவது மாட்டுப்பொங்கலன்று வீட்டில் சொல்லி விடுவோம். நாளை எங்களை எதற்கும் கூப்பிடக்கூடாது, எந்த வேலையும் சொல்லக்கூடாது என. இதில் சாப்பாடும் அடக்கம். நாங்களாக வந்தாலொழிய சாப்பிடக்கூட கூப்பிடக்கூடாது. காலை ஐந்தேமுக்கால் அல்லது ஆறு மணிக்கு தொடங்கும் விளையாட்டு மாலை ஏழு மணி வரை தொடரும், சில நேரம் உணவு கூட இல்லாமல்.

முதலில் ஆரம்பிப்பது கோலிக்குண்டுதான். பசங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு கோலி விளையாட்டின் வகைகள் முடிவு செய்யப்படும். பேந்தா விளையாடி முட்டித்தள்ள வைப்பதுதான் இறுதிகட்ட சுவாரசியம்.
காலை உணவிற்குப்பின் சணல் பந்து. இந்த சணல் பந்து எங்கள் ஊரின் சம்பிரதாய பாரம்பரிய விளையாட்டு. வயது வித்யாசம் பாராமல் அனைவரும் விளையாடுவோம்.  இந்நாளைய கிரிக்கெட்டின் முன்னோடி. சிறு சிறு
கருங்கல் ஜல்லிகளை நடுவில் வைத்து அதன் மேல் சணலால் சுற்றி சுற்றி  கிட்டத்தட்ட ஒரு பெரிய தேங்காயின் அளவிற்கு கொண்டுவந்தால் பந்து ரெடி. அரைகிலோ அல்லது முக்கால் கிலோ இருக்கும் ஒரு பந்து.  இரண்டு டீமாகப் பிரிந்துகொள்ளவேண்டும். மூன்றுமூன்று செங்கற்களை இருபுறமும் வைத்து
இடையில் ஒரு 4 அடி அளவுள்ள ஒரு கழியை படுக்கை வாட்டமாக வைக்கவேண்டும். பந்து எறிபவர் ஒரு பக்கம், கழிக்கு எதிரில் கழி கீப்பர் (விக்கெட் கீப்பர் போல) பக்கத்திற்கு ஒன்றாக இருவர், எதிர் முனையில்
பந்து எறிபவரின் எதிரி என ஒரு நேரத்தில் மூவர் களத்திலிருப்பர். ஒரு பக்கமாக முப்பது, நாற்பது அடி தூரத்திலிருந்து பந்தை வீசி எறியவேண்டும். அவரவர் பலத்திற்கு தகுந்த படி பந்து பாய்ந்தும், உருண்டும் வரும். பந்து நடுவில் வைக்கப்பட்டுள்ள கழியை கீழே தள்ளி விடவேண்டும். அப்படி விழுந்து விட்டால் (Clean Bold ) பந்து எறிபவரின் எதிரி இந்தப்பக்கத்தில் அவுட். அப்படி கழி விழாமல் அதைத்தாண்டி துள்ளும் பந்தைப்பிடித்து இப்பக்கம் இருப்பவர் கழியை திருப்பி அடித்துவிட்டால் (Stumping ) பந்து எறிந்தவர் அவுட்.
எந்நேரத்திலும் கழியை கீழே விழ விடாமல் பிடித்து விட்டால் பந்து மற்றொரு பக்கத்திலிருந்து வீசப்படும்.ஏதோ ஒரு பக்கத்தில் உள்ளவர்கள் முழுவதுமாக முதலில் அவுட் ஆகிறார்களோ அவர்கள் தோத்தாங்குளி.ஒரு வருடம் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் என இரு புறமுமாக பிரிந்து ஆடி இருக்கிறோம். யாராவது தோற்று வெளியேறினால் கிராமத்திற்கே உரித்தான கிண்டல் கேலிகள் தூள் பறக்கும்.

 கருங்கல் கற்களை வைத்து கட்டிய பந்து என்பதால் ஏடாகூடமாக பிடித்தால் விரலில் ரத்தம் வருவது உறுதி.

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு....?

அடுத்தடுத்து ஒவ்வொரு விளையாட்டாக முடித்துக்கொண்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் வெள்ளாற்றிற்கு சென்றுவிடுவோம். உப்புவாரி, பே பந்து என ரகளை கட்டும். ரப்பர் பந்தால் அடித்து முதுகு பங்சர் ஆகி விடும். இரவு நெருங்கியதும் அப்படியே கொத்து கொத்தாக ஆற்றில் குதித்து கும்மாளமடித்து குளித்து விட்டு கும்பலாக (அப்பா.. எத்தனை ’கு’..! ) ஊரில் எல்லையில் இருந்து ஒவ்வொரு வீடாக எல்லாருடைய வீட்டிற்கும் செல்வோம். ஒவ்வொரு வீட்டிலும் சூடம் கொளுத்தி திருநீறு இடுவார்கள்.

இறுதியில் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு, தெருவின் நடுப்பகுதிக்கு வருவோம்.  நடுவிலிருந்து எதிர் எதிராக செல்ல வேண்டியவர்கள் இருபுறமும் பிரிந்து நின்று அனைவருக்கும் கும்பிட்டு வணக்கம் சொல்லி அவரவர் வீடு செல்வோம்.

இதற்கு நடுவில் ஊர்ப்பெண்கள் சீவி முடித்து சிங்காரித்து கோயிலின் முன் கும்மி, கோலாட்டம் என பட்டையை கிளப்புவார்கள்.காணும் பொங்கல் அதிகாலை தொடங்கி இரவு வரை நீளும்.  விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகளும் தரப்படும்.

இன்றைய காணும் பொங்கலை எனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு ஒரு கட்டுரையில் முடித்துவிட்டேன்.




Wednesday, 1 January 2014

புத்தாண்டின் முதல் மொக்கை...!!!

ஐம்பது வருடங்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் இருக்க முடியும்?

இடங்களில், மொழிகளில், தொழில்நுட்பங்களில், காலங்களில்,
உருவங்களில் இந்த மாற்றங்கள் இருந்துகொண்டே தான் இருக்கும்.
மாற்றங்களும் சூழ்நிலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் கட்டாயமாக
இவைகளை கடந்துதான் ஆகவேண்டும்.

நாடுகளைத்தாண்டி பயணப்பட்ட குதிரைகள் இன்று சில்லறைக்காக
கடற்கறையில் சுற்றி சுற்றி வருகின்றன. கோட்டைகளை இடித்த
யானைகள் தெருக்களில் பிச்சை எடுத்து திரிகின்றன.

எல்லாவற்றையுமே எதிர்மறையாக ஒதுக்கி விடவும் முடியாது. தொழில்
நுட்பங்களின் அசுர வளர்ச்சி மனித வாழ்விற்கு உன்னதம்.
சுலபமாகவும், வேகமாகவும், அதிகமாகவும் ஒரு வேலையை செய்ய
உருவாக்கப்பட்டதே இயந்திரங்கள். எல்லா கண்டு பிடிப்புகளின் உள்ளேயும்
ஒரு சாத்தான் தன் பற்களை நற நற வென்று கடித்துக்கொண்டு எதற்கோ
காத்திருக்கிறது. பயன்களைக்காட்டிலும் எதிர்மறை விளைவுகளே
அதிகரித்துவருகின்றன.

இப்போதெல்லாம் மனிதன் அவனது தேவைகளை சார்ந்து இயங்குவதை விட அவனது சுயநலம் சார்ந்தே இயங்குகிறான்.இந்த சுயநல மாற்றங்கள்தான் அணுகுண்டைவிட ஆபத்தானவை. ஒவ்வொருநாளும் இந்த சுயநலங்களின் தேவைகளோ விருப்பங்களோ மலைபோல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

எல்லா காலங்களிலுமே மனிதன் சுயநலவாதிதான். ஆனால் அதற்கு
அவன் குடுத்த மதிப்பு அப்போதெல்லாம் மிகக்குறைவு. தன் உலகம், தன்
நாடு, தன் ஊர், தன் குடும்பம் என எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாய்
சுருங்கி இப்போது அவன் சிந்திப்பது அவனுக்கும், பிள்ளைகளுக்கும்
மட்டுமே. அவன் பிள்ளைகளுக்கோ, அவர்களைத்தவிற யாருக்குமே
இடமில்லை.

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். ஆம், ஊத்தினான் என் முப்பாட்டன்.
அந்த மரத்தின் பலனை அவன் அனுபவிக்கப்போவதில்லை என தெரிந்தே
ஊற்றினான்.

அடுத்தடுத்த தலைமுறைகளும் மரங்களை வைத்து தண்ணீர்
ஊற்றினார்கள். கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.அவர்களும் அவர்களது
சுற்றத்தாரும் அனுபவித்தார்கள்.

நாம் உழைக்கவே இல்லை. ஆனால் அந்தப்பழங்கள் மட்டும் நமக்குத்தேவை.

நமது பிள்ளைகளுக்கும் பழங்கள் தேவை. பழங்கள் மட்டுமே தேவை. அது
இன்னொருவருக்கு உரிமையான பழமானாலும்.

இப்போதைய தலைமுறைக்கு பழங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றன.
அதன் ருசியின் மேல் மட்டுமே ஆர்வம் இருக்கிறது. ஆனால் முளைத்து,
வளர்ந்து கிளைவிட்டு மரமாகி பூத்து, காய்த்து கனியும் வரை பொறுமை
இல்லை.இங்கே பழம் என்பது ஒரு குறியீடுதான். பழத்தை வெற்றி என்று
வைத்துக்கொள்ளலாம்.

இந்தக்கால குழந்தைகளுக்கு வெற்றி உடனடித்தேவை. வெற்றிக்கான உழைப்பை தருவதில்லை. கனியும் வரை காத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றிலும் முதலாக வேண்டும். புகழின் வெளிச்சம் தலைமேல்
விழவேண்டும்.  பலவருட உழைப்பிற்கும் சில நிமிட வேலைகளுக்கும்
வித்யாசம் தெரிவதில்லை. தோல்வியை ஒத்துக்கொள்ளும் மனநிலை
அறவே இல்லை. விட்டுக்கொடுத்தல் என்றால் கிலோ என்ன விலை?
சூழ்நிலையின் மூலம் கற்றுக்கொள்ளும் சுயநலத்தைக்கூட
கட்டுப்படுத்திடமுடியும். குழந்தைகள் சுயமாகவே சுயநலவாதிகளாய்
வளர்வதின் காரணங்களை அறிந்துகொள்ளவே முடியவில்லை.

இவைகள் எதன் தொடர்ச்சி? அல்லது எதன் மிச்சம்?

இந்த சுயநலவாத மாற்றங்களை பார்க்கும் பார்வையாளனாய் இருக்கும்
கையறு நிலைக்கு வழிதான் என்ன?

என்ன செய்யப்போகிறோம்?

HAPPY NEW YEAR......:)